×

பவானி ஆற்றின் குறுக்கே பெரியமோளபாளையத்தில் ரூ.13 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்: நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

பவானி: பவானி ஆற்றின் குறுக்கே ஜம்பையை அடுத்த பெரியமோளபாளையத்தில் ரூ.13.26 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே அரக்கன்கோட்டை, ஆலத்துக்கோம்பை, வாணிப்புத்தூர், அத்தாணி மற்றும் பெரியமோளபாளையம் என ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது.

அத்தாணி அருகே கருவல்வாடிபுதூர் - அம்மாபாளையம் கிராமங்களுக்கு இடையே 155 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் (5 அடி உயரம்) உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜம்பை பேரூராட்சி, பெரியமோளபாளையத்தில் ஐந்தாவது தடுப்பணை கட்டும் பணிகள் ரூ.13.26 கோடியில் தொடங்கப்பட்டு 6 மாதமாக பொதுப்பணித்துறை சார்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆற்றின் நடுவே தற்காலிக பாதை அமைக்கப்பட்டதோடு, இரு கரையோரங்களிலும் ராட்சத கான்கிரீட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. பவானிசாகர் அணை நிரம்பியதால் அவ்வப்போது உபரிநீர் திறக்கப்படும் நிலையில், தற்காலிக பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெறுவதுமாக உள்ளது.

இருந்தபோதிலும் கட்டுமான பணி விரைவில் முடிக்கப்படும் வகையில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பணை கட்டி முடிக்கப்படும்போது, சுமார் 4 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். மேலும், ஆற்றுக்குள் 120 அடி முதல் 180 அடி வரையில் ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். அப்போது, தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீர் நிலத்துக்குள் செல்லும்போது, நிலத்தடி நீர்மட்டம் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகரிக்கும். 2 கி.மீ. சுற்றளவில் விவசாயக் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் வற்றாமல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இதனால், விவசாயம் செழிக்கும், விவசாய சார்ந்த பொருளாதாரம் உயரும். விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்பாடு அடைவதோடு, ஆற்றில் மீன் வளமும் அதிகரிக்கும்.தேங்கும் தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் வகையில் ஆற்றின் கரையோரங்களில் கான்கிரீட் பாதுகாப்பு சுவர்களும் அமைக்கப்படுகிறது. ஆற்றில் உபரிநீர் வரும்போது தடுப்பணையின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் தலா ஒரு ராட்சத  இரும்புக் கதவுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.

பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், தாழ்வான பகுதியாக உள்ள பவானியை நோக்கி வேகமாகச் செல்வது வழக்கம். வேகமான நீரோட்டத்தைக் கொண்ட பவானி ஆற்றில் விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி மேல் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தாலும் தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டுமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. முழு வீச்சில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் விரைவில் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவில் தடுப்பணை
பவானிசாகர் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரையில் ஆலாத்துக்கோம்பை, அத்தாணி, பவானி, பெரிமோளபாளையம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. இவற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு வேளாண் பணிகள் மற்றும் குடிநீர் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என கூறப்படுகிறது. பவானி ஆற்றில் மேலும் பல தடுப்பணைகள் அடுத்தடுத்து கட்டப்படும்போது கரையோர பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். மீன் வளமும் பெருகும். வேளாண் பணிகள் தடை இன்றி நடைபெறும். எனவே, அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Bhavani River ,Perimolapalayam , Dam, Ground Water Level, Farmers Confidence
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து