×

ஸ்ரீவைகுண்டம் - ஆதிச்சநல்லூர் இடையே தாமிரபரணியில் படகு குழாம் அமைக்கப்படுமா?... சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவைகுண்டம்: உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமையும் நிலையில் ஸ்ரீவைகுண்டம்  -  ஆதிச்சநல்லூர் இடையே தாமிரபரணி ஆற்றில் படகு குழாம்  அமைக்க   வேண்டுமென சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். நவத்திருப்பதி  கோயில்கள் மற்றும் நவக்கைலாயக் கோயில், குருசு கோயில், பள்ளிவாசல்கள்,  சிஎஸ்ஐ ஆலயம் என மும்மதத்தினரும் வழிபடக் கூடிய புகழ்பெற்ற ஆன்மீக  திருத்தலங்கள் உள்ளடக்கியது ஸ்ரீவைகுண்டம்.

இங்கு தாமிரபரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள அணையில்  படகு குழாம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையாக உள்ளது.
பொதுப்பணித்துறையினரின்  முறையான பராமரிப்பு இன்றி தூர்ந்துபோய் இருந்த அணையில் போதிய ஆழம்  இல்லாததால் அப்போது படகு குழாம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிக்கும் விதமாக 2 அடி உயர்த்தப்பட்டு  படகு குழாம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அணை பகுதியில் படகு குழாம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.

3 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள்  தலைமையிலான வருவாய்த்துறையினர் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி  சீரமைத்தனர். அணையில் தேங்கியிருந்த அமலைச் செடிகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டன. அணைக்கு கீழ் பகுதியில் புதுப்பாலத்திற்கு இடைபட்ட பகுதியில்  ஆக்கிரமித்து இருந்த கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டதால், 15  ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கலை ஆற்றுக்கு நடுவே பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  

தாமிரபரணியின் சலசல சத்தம், நிழல் தரும் மரங்கள், ஆற்று மணல் என பொதுமக்களின் கொண்டாட்டம் காணும் பொங்கலன்று கரைபுரண்டோடியது. தொடர்ந்து அப்போதைய தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், மாவட்ட  சுற்றுலா அலுவலர் சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன்,  போக்குவரத்து கோட்ட மேலாளர் சமுத்திரம் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதியில் படகு குழாம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு  செய்தனர். அதன் பிறகு அதிகாரிகளின் பணியிட மாற்றத்தால், ஆரம்பகட்ட நிலையிலேயே இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில்  ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொழில் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த  அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

 ஒன்றிய  தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கம்  உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில்  ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களும், வரலாற்று  ஆர்வலர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். அருங்காட்சியகம் திறக்கப்பட்டதால், சுற்றுலாத்தலமாக மாறும் என்பதால் ஸ்ரீவைகுண்டம் -   ஆதிச்சநல்லூர் இடையே தாமிரபரணி ஆற்றில் படகு குழாம்  அமைக்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் ஐஎன்டியுசி துணை தலைவர் சந்திரன் கூறுகையில், சட்டமன்ற தொகுதியின்  தலைமையிடமான ஸ்ரீவைகுண்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில்  பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லை.

ஆதிச்சநல்லூரில்  அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள சூழ்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து  ஆதிச்சநல்லூர் வரை சென்று வரும் வகையில் படகு குழாம் அமைத்தால் சாலை  வழியாகவும், தாமிரபரணி ஆற்றில் படகு மூலமும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன்  சென்று வருவார்கள். இதற்கான முயற்சிகள் அனைத்தையும் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசும் விரைந்து படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Tags : Srivaigundam ,Tamiraparni ,Adichanallur , Srivaikundam - Adichanallur, Thamirapharani boat crew, tourists and public expect.
× RELATED முன் விரோதம் காரணமாக ஓபிஎஸ் அணி...