×

கமுதி அருகே அம்மன் கோயில் விழாவில் சாக்கு வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி: கமுதி அருகே கோயில் விழாவில் பக்தர்கள் சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம், சேறு பூசி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சாக்குகளை பேண்ட் மற்றும் சட்டை மாதிரி தைத்து அதை அணிந்து பின்பு வைக்கோல்களை திணித்து கனமான மனிதர் போல மாற்றிய வைக்கோல் மனிதர்கள் 6 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முளைப்பாரி புறப்பட்டதும் மேள தாளங்களுடன் சாக்கு வேடம் அணிந்தவர்களும் கும்மி அடித்து முளைப்பாரிக்கு முன்பே நடனம் ஆடி சென்றனர். 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளோடு அழகு வள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று கிராமத்தில் உள்ள ஊரணியில் பாரிகளை கரைத்தனர்.

Tags : Amman ,Kamudi , Kamudi, Amman temple festival, devotees dress up in sack clothes
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்