×

“தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மதுரை மண்டல மாநாட்டில் தொழில்முனைவோர் மற்றும் வங்கிகளுக்கான விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: சொத்துப் பிணைய உரிமை பத்திரம் பதிவு செய்ய ஆன்லைன் வசதி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும் என தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் கூறினார். மேலும் தொழில்முனைவோர் மற்றும் வங்கிகளுக்கான விருதுகளை வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மதுரை மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, தொழில்முனைவோர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.
    
தொழில்முனைவோர் மற்றும் வங்கிகளுக்கான விருதுகள்

தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வங்கிகளையும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு  விருதுகள் வழங்கி வருகிறது.

அதன்படி, 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் விவரங்கள்:

சிறந்த தொழில் முனைவோருக்கான விருது தூத்துக்குடி மாவட்டம், கல்பகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்திற்கும்; வேளாண் சார்ந்த தொழில்களுக்கான விருது திருப்பத்தூர் மாவட்டம், ப்ரெஸ்ரா பிக்ல்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும்; தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது தூத்துக்குடி மாவட்டம், ரமேஷ் ப்ளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும்; சிறந்த மகளிர் தொழில்முனைவோருக்கான விருது செங்கல்பட்டு மாவட்டம், ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ் நிறுவனத்திற்கும்; சிறப்புப் பிரிவினருக்கான விருது புதுக்கோட்டை மாவட்டம், பிரபு இண்டஸ்ட்ரியல் கேஸ்சஸ் நிறுவனத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு விருது

முதல் இடத்திற்கான விருதினை இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் இடத்திற்கான விருதினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், மூன்றாம் இடத்திற்கான விருதினை பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வங்கிக்கடனுக்கான சொத்துப் பிணைய உரிமைப்பத்திரம் பதிவு செய்திட ஆன்லைன் வசதி
    
தற்போதுள்ள நடைமுறைப்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும் பொழுது, அந்த சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து (M.O.D. - Memorandum of Deposit of Title Deed and Equitable Mortgage) பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் உரிமையாளரும் வங்கி மேலாளரும் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.  இதனால் கால விரயம் ஏற்பட்டு கடன் பெறுவது தாமதமாகிறது. கடன் திருப்பி செலுத்தியபின் அதேபோல் M.O.D. பதிவு செய்ததை இரத்து செய்து இரசீது பெறுவதற்கும் வங்கி மேலாளர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்படுகிறது.

எனவே, இந்த காலவிரயத்தை தவிர்க்கும் நோக்கில், தொழில் நிறுவனங்கள், வீட்டுக்கடன் பெறுவோர், விவசாயக்கடன் பெறும் விவசாயிகள் என ஆண்டொன்றுக்கு சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் பயனாளிகள் பயனடையும் வகையில், சொத்தின் மீது கடன் பெறுவதற்கான, உரிமைப்பத்திரம் ஒப்படைத்து (Memorandum of Deposit of Title Deed and Equitable Mortgage) பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் வங்கிகளிலிருந்தே ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்திடும் வசதியினையும், கடன் திருப்பி செலுத்தியபின்  பதிவு செய்ததை ஆன்லைன் மூலமே இரத்து செய்து இரசீது பெறுவதற்கான வசதியினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும், தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், “தமிழ்நாடு பதிவுச் சட்ட திருத்தம்” செய்து  அதற்கான ஆன்லைன் வசதியும், வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.  

குறுந்தொழில் குழுமம் அமைப்பதற்கான ஆணை

மாநிலம் முழுவதும் பரவலாக குறுந்தொழில் நிறுவனங்கள் கொண்ட பல்வேறு  குறுங்குழுமங்கள் (Micro Clusters) உள்ளன. ஊரகப்பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திட இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது ஆகும். இக்குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக, ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 20 குறுங்குழுமங்கள் அமைக்கப்படும் என்று 2022-23ஆம் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஏற்கனவே, நான்கு குழுமங்கள் ரூ.32.98 கோடி அரசு மானியத்துடன் ரூ.44.06 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று, மதுரை மாவட்டம், விளாச்சேரியில் ரூ.3.63 கோடி அரசு மானியத்துடன்  ரூ.4.03 கோடி திட்ட மதிப்பீட்டில் பொம்மைக் குழுமம், தூத்துக்குடியில் 100 விழுக்காடு அரசு மானியத்துடன் ரூ.2.02 கோடி திட்டமதிப்பீட்டில் ஆகாயத்தாமரைக் குழுமம், விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் ரூ.3.40 கோடி அரசு மானியத்துடன் ரூ.3.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மகளிர் நெசவுக் குழுமம், ஆகிய மூன்று குறுங்குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.

சிட்கோ நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகள் தொடக்கம்

சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில்,  வங்கி கடனுக்கான தடையின்மை சான்று,  குடிநீர் இணைப்பு,  விற்பனைபத்திரம் பெறுதல்  உள்ளிட்ட 12 சேவைகளை  ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கான வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பொதுவசதிக் கட்டடங்கள் திறப்பு

கரூர் மாவட்டம், புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடி செலவிலும், இராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி  வாயிலாக திறந்து  வைத்தார்.

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்

பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனையுடன் உருவாக்கிட “பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” எனும் புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.  

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும்,  பள்ளி கல்வித்துறையும்  யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும். இந்த ஆண்டு, முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், 3120-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.

மேலும், மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர் குழுக்களின் சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இதன்மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுத்தப்படுவதோடு, அவர்களை வருங்கால தொழில்முனைவோர்களாக உருவாக்க முடியும்.

கேர் திட்டம் (CARE - Covid Assistance and Relief to Entrepreneurs)

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிக்கும் தகுதியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  பயனடையும் வகையில்,  ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கேர் (CARE) - “தொழில்முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்” என்கின்ற புதிய திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல் பயனாளிக்கு 8.80 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை கடனாக வழங்கினார்.

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ) மூலம் கடனுதவி வழங்குதல்  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தினை 25.08.2022 அன்று திருப்பூரில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தாய்கோ வங்கி மூலம் தனது பயணத்தைத் தொடர்ந்து உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கும் வகையில் தாய்கோ வங்கி சீரமைக்கப்படும் என்று அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் தாய்கோ வங்கியின் ஃப்ளை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.64.38 இலட்சம் கடனுதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். ஃப்ளை திட்டமானது சிட்கோ நிறுவனத்திடமிருந்து மனை ஒதுக்கீடு ஆணை பெற ஒதுக்கீடு கடிதத்தின் அடிப்படையில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் தாய்கோ வங்கியின் கடன் திட்டமாகும்.

தமிழ்நாடு அரசு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS)

தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS) என்கின்ற பிரத்யேகத் திட்டம் கடந்த மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ், 81 குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20.13 கோடி கடன் தமிழ்நாடு அரசு கடன் உத்தரவாதத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் (TN TReDs)

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை மிகவும் காலதாமதமாக பெறும் நிலைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் கடந்த மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்தளத்தில் தமிழ்நாடு அரசின் 76 பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன.

இந்த முயற்சியை முன்னெடுத்து செல்லும் விதமாக,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் வங்கிகள், ட்ரட்ஸ் தளத்திற்கான 1391 கோடி ரூபாய்க்கான தங்களது கடன் உச்ச வரம்புகளை அறிவித்துள்ளதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தோள் கொடுக்கும் பங்குதாரர்களாக மாறியுள்ளன. இது வெகுவிரைவில் 5000 கோடி ரூபாயை அடையும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பல்வேறு துறைகள் மூலம் நிதி வசதி, உட்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, தர மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு, உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன.  இத்திட்டங்கள் குறித்த தகவல்கள் ஒரே இடத்தில் இடம்பெறும் வகையில், 97 திட்டங்கள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான கையேட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.  

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலக அளவில் நம் தொழில் நிறுவனங்கள் போட்டியிட்டு நீடித்த வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால், நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயார்படுத்திக் கொள்ள பயிற்சி வழங்குவதற்காக இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின்  FaMe TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. சு. வெங்கடேசன்,   சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அ.வெங்கடேசன், திரு.மு.பூமிநாதன், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி வி. இந்திராணி பொன்வசந்த், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்
திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்  திருமதி ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திரு.வி.அருண் ராய், இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் திருமதி மதுமதி, இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் திரு.ம.ப. சிவன்அருள், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., வங்கி உயர் அலுவலர்கள், TANSTIA உள்ளிட்ட அனைத்து தொழில் முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Madurai Zonal Conference ,K. Stalin , Chief Minister M.K.Stalin presented awards to entrepreneurs and banks at the Madurai regional conference 'Let us lend a shoulder to industries'.
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...