×

சட்டம் ஒழுங்கு பிரிவில் நேர்மையானவர்களை நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும்: டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீப காலமாக குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும், அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என வாதிடப்பட்டது. இதை ஏற்று நால்வரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, ‘சமூகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணியம் மிகவும் முக்கியம்’ என குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும், சட்டம் - ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வது உயரதிகாரிகளின் பொறுப்பு எனவும்  நீதிபதி சுப்ரமணியம் அறிவுரை வழங்கினார். சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்டம் - ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Madras HC ,DGP , Ensure appointment of honest people in law and order department: Madras HC orders DGP
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...