×

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக எஸ்ஐ மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி: ஆசாமிக்கு வலை

சென்னை: ரயில்வேயில் இன்ஜினியர் வேலை வாங்கி தருவதாக எஸ்ஐ மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி ஆய்வாளர் குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (50). இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (22), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை தேடி வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த சசிகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது விக்னேஷ் வேலை தேடி வருவதை அறிந்த இருவரும், ‘தெற்கு ரயில்வேயில் எங்களுக்கு உயர் அதிகாரிகள் தெரியும். நாங்கள் இன்ஜினியர் வேலை வாங்கி தருகிறோம். அதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும்’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு விக்னேஷ் மற்றும் அவரது தாய் மங்கை (47) ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து ரூ.8 லட்சத்தை சசிகுமார் மற்றும் ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.2 லட்சத்தை வேலை கிடைத்ததும் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால், சொன்னபடி சசிகுமார் மற்றும் ஜெயகுமார் விக்னேஷூக்கு தெற்கு ரயில்வேயில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது தாய் மங்கை ஆகியோர், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் இருவரும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

பிறகு சம்பவம் குறித்து  அபிராமபுரம் காவல் நிலையத்தில் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மங்கை ஆகியோர் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், குற்றம் சாட்டப்பட்ட சசிகுமாரை கடந்த 7ம் தேதி மோசடி வழக்கு ஒன்றில் எஸ்ஆர்எம்சி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது தெரியவந்தது. ஜெயகுமார் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை கைது செய்ய அபிராமபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : Asami , Rs 8 lakh scam from SI's son on the promise of getting a job in Railways: Asami's web
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...