தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை; நேபாள காவலாளிக்கு வலை

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற நேபாள நாட்டை சேர்ந்த காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பன்சிதர் குப்தா (45). தொழிலதிபரான இவர், பாரிமுனை பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இனிப்பகம் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பன்சிதர் குப்தா கடைக்கு சென்று விட்டார். இவரது தாயார் மஞ்சு குப்தா மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ராஜன் (எ) திபேந்திரா ஆஜி (20) ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

மாலையில், மஞ்சு குப்தாவும் வீட்டை பூட்டிவிட்டு பாரிமுனையில் உள்ள கடைக்கு சென்று விட்டார். பின்னர், பன்சிதர் குப்தா வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் காவலாளி ராஜனை தேடிய போது, அவர் மாயமாகி இருந்தார். வீட்டிற்குள் சென்று முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள படுக்கை அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 10 தங்க காசுகள், 6 மோதிரம், 3 செயின் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து தொழிலதிபர் பன்சிதர் குப்தா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பணியில் சேர்ந்த 2 மாதத்தில் நகை மற்றும் பணத்துடன் மாயமான நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ராஜனை தேடி வருகின்றனர்.

Related Stories: