×

சென்னை ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கு பல்கேரியாவில் மீதி தண்டனையை அனுபவிக்க 3 பேரை போலீசார் அழைத்து சென்றனர்: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை: சென்னை நகரில் நூதன முறையில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து கைதாகி, புழல் சிறையில் இருந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேர் பலத்த பாதுகாப்புடன் பல்கேரிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில், பல்கேரியா நாட்டிற்கு பல்கேரிய போலீசார் 3 பேரை அழைத்து சென்றனர். சென்னை நகரில் பல்வேறு பகுதியில் உள்ள ஏடிஎம்களில் ஒரு கும்பல்  நூதனமான முறையில், போலி ஏடிஎம் காா்டுகளை பயன்படுத்தி, ஸ்கிம்மா் முறையில் பணம் கொள்ளையடித்து வந்தனர்.

இதையடுத்து சென்னை மாநகர போலீசின், கிரைம் பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை ஓஎம்ஆர் சாலையில் தங்கியிருந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த நிக்கோலா, போரீஸ், லூம் போப்பி ஆகிய 3 பேரை கைது செய்து, 50க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், லேப்டாப், இந்திய மற்றும் அமெரிக்க டாலர்களை பெருமளவு கைப்பற்றினர். அதன்பின்பு பல்கேரியர்கள் 3 பேரும் விசாரணை கைதிகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2019 டிசம்பரில் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து 3 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டனர்.

பின்பு 2021ம் ஆண்டில், சென்னை நீதிமன்றம் ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, திருச்சி சிறப்பு முகாமிலிருந்த 3 பல்கேரியர்களும், மீண்டும் சென்னை புழல் சிறைக்கு தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டனர். இந்நிலையில் பல்கேரியா நாட்டு அரசு, இந்திய அரசிடம் பேசி தங்கள் நாட்டு கைதிகளை தங்களிடம்  ஒப்படைக்கும்படியும், அவர்களுடைய தண்டனை காலத்தை, தங்கள் நாட்டில் சிறையில் அவர்கள் கழிப்பார்கள் என்றும் கூறியது. அதற்கு இந்திய  அரசும் அனுமதி அளித்தது. அதன்பேரில் பல்கேரிய நாட்டில் இருந்து வந்த தனிப்படை போலீசார், முறைப்படி சென்னை புழல் சிறையில் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றனர்.

அவர்களை பல்கேரியா நாட்டிற்கு அழைத்து செல்ல, குடியுரிமை பிரிவு அதிகாரிகளிடமும் முறைப்படி அனுமதி பெற்று, பல்கேரியர்கள் 3 பேரையும், சென்னை புழல் சிறையிலிருந்து, பலத்த பாதுகாப்புடன் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து, தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில், கத்தார் நாட்டு வழியாக பல்கேரிய நாட்டிற்கு அழைத்து சென்றனர்.

Tags : Chennai ,Bulgaria , Police take 3 to serve remaining sentence in Chennai ATM robbery case Bulgaria: Tight security at airport
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...