×

அம்பத்தூர் ஒரகடம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்குள்ள காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், மாதவரம், புழல், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கோயம்பேடு, தி.நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களும் இந்த பேருந்து நிறுத்தம் வந்து, பஸ் பிடித்து மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சுக்காக தினசரி சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மழை, வெயில் காலங்களில் ஒதுங்க கூட இடம் இல்லாததால், பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.  எனவே, இந்த பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டும், என பலமுறை அதிகாரிகளிடம்  மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் சிரமப்படுகின்றனர். மேலும் கூட்ட நெரிசல் காரணமாக அலுவலக நேரங்களில் இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் சரிவர நிற்காததால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, எம்பி, எம்எல்ஏ நிதியிலிருந்து இந்த பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.

Tags : Ambattur Oragadam , A shelter should be set up at Ambattur Oragadam bus stand: Passengers demand
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...