நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை: உடனடியாக ஜெயிலில் அடைக்க உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக மதுரை சிறையில் அடைக்க ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதித்துறை பற்றி சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ல் தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார். இதனால் அவருக்கு எதிராக, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த வாரம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தபோது, இது குறித்து இனிமேல் வெளியில் பேசமாட்டேன் என உத்தரவாதம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கூறினர். இதை ஏற்க மறுத்த சங்கர், தான் தொடர்ந்து பேசுவதாகவும்,  குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ பதிவு அல்லது அதற்கான தட்டச்சு நகலை தரும்படியும் கூறினார். தொடர்ந்து, சங்கர் மீதான குற்றச்சாட்டை நீதிபதிகள் வாசித்து காட்டினர். இதற்கு பதிலளிக்க போதிய கால அவகாசம் வேண்டும் என கேட்டதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஆஜராகி, பதில் மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘சங்கர் மன்னிப்பு ேகட்க தயாராக இல்லை. அவர் தனது வாதத்தை தொடர்ந்து நியாயப்படுத்துகிறார். அவரது அறிக்கைகளும், கருத்துகளும் நீதிமன்றத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் குறைக்கும். எனவே, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் அவர் குற்றவாளி என தீர்மானிக்கிறோம். தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், கடந்த சில வாரங்களாகவே அவரது நடவடிக்கை தொடர்ந்து அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளானவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநில அரசு ஊழியர். இந்த காலகட்டத்தில் அரசிடம் இருந்து 13 ஆண்டுகளாக பிழைப்பூதியம் பெற்று வருகிறார்.

மாநிலத்தின் 3 அவயங்களின் மீதும் கடுமையாக தாக்கி வருகிறார். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொண்டாலும், புண்படுத்தும் அறிக்கைகளையும், நீதித்துறை மீதான தாக்குதல்களையும் தொடர்கிறார். எனவே, அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை உடனடியாக போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைக்க வேண்டும். இவரது நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை டிவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களின் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 14க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: