பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனத்திற்குள் விரட்டியபோது யானை தாக்கி லாரி டிரைவர் பலி

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் அருகே காட்டு யானை தாக்கி லாரி டிரைவர் பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை, பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் நடமாடியது. அப்போது பண்ணாரி வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த லாரி டிரைவர்கள் சேர்ந்து காட்டு யானையை விரட்ட முற்பட்டனர். வெகு நேரம் போராடியும் காட்டு யானை கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறாமல் அங்குமிங்கும் நடமாடியது. ஒரு கட்டத்தில் காட்டு யானை வனத்துறை ஊழியர்களையும், லாரி டிரைவர்களையும் துரத்தியது. இதில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாஸ் (33) என்பவரை யானை துரத்தி தும்பிக்கையால் பிடித்து காலால் மிதித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Related Stories: