அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளை திருப்பி அனுப்ப மாட்டோம்: தமிழக அரசு ஐகோர்ட்டில் திட்டவட்டம்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பராமரிக்கப்படும் அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட யானை ஜாய் மாலாவை, அதன் பாகன்கள் வினைல் குமார் மற்றும் சிவ பிரசாத் ஆகியோர் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. கடந்த 2021ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒன்பது கோயில்களுக்கு 2010 - 2015ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட யானைகளை திரும்ப பெற அசாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, அசாம் அரசிடமிருந்து தமிழக அரசு பெற்ற ஒன்பது யானைகளையும் திருப்பி அனுப்ப தடை விதிக்க கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தமிழகத்தில் கோயல் யானைகளை பராமரிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை கோவில் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் யானை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு பாகன்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த யானைகளை மீண்டும் அசாமுக்கு அனுப்புவது என்பது மத உணர்வுகளை புண்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட யானைகளை மீண்டும் சுவாதீனம் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் 9 கோவில் யானைகளையும் யாரிடமும் ஒப்படைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழகத்தில் உள்ள ஒன்பது கோவில்களில் பராமரிக்கப்படும் அசாம் மாநிலத்தைச் சார்ந்த யானைகளை திருப்பி அனுப்பப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: