×

கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுபட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும், வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனவும்,  கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றியும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Tags : ICourt , 3-judge bench to hear case against transfer of education from state list to general list: ICourt orders
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...