×

சமத்துவ பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் திமுக அரசு ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் உரிமையை வென்றெடுக்க துணைநிற்கும்: நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகளிடம் முதல்வர் உறுதி

சென்னை: சமத்துவ பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் திமுக அரசு, ஒடுக்கப்பட்ட,  விளிம்புநிலை, சிறுபான்மை சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின்  உரிமைகளை வென்றெடுக்க துணைநிற்கும்  என்று நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: ‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக திமுகவும், திமுக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்கு சென்று நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் வழங்கினேன்.

இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பாக எடுக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்டறிந்து தேவைகள் மதிப்பீட்டு பட்டியல் தயார் செய்திடவும் தலைமை செயலாளர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், 5,875 குடியிருப்பு பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பிடப்பட்டுபல்வேறு உதவித் தொகைகள், சாலை வசதி, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியிருக்கும் இந்த வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூகநீதிக்காக அனைத்து மட்டங்களிலும் திமுக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் இன்று (நேற்று) என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சமத்துவ பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் நமது அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மை சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் துணைநிற்கும் என்று அவர்களிடத்தில் உறுதியளித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்
அண்ணா 114வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘‘தம்பி! உன்னைத்தான் தம்பி...” என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்கு சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் - ஈன்றெடுத்த தமிழன்னைக்கு பெயர்சூட்டிய பெருமகன் - நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணாவை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : DMK government ,Samatthu Periyar ,Chief Minister ,Narikuruvar , A DMK government following the path of Samatthu Periyar artiste will help win the rights of oppressed and marginalized people: Chief Minister assures the representatives of Narikuruvar community.
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...