×

ரோஜர் பெடரர் ஓய்வு

ஜூரிச்: உலகின் முன்னாள் நெம்பர் ஒன் வீரரும், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான  ரோஜர் பெடரர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர்(41) 1998ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். தொடர்ந்து 2004ம் ஆண்டு உலகத் தரவரிசையில் நெம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். அவர் 310 வாரங்கள் நெ.1 இடத்தில் இருந்தார். அதில் 237 வாரங்கள் தொடர்ந்து நெ.1 இடத்தில் நீடித்தார். இதுவரை 103 சர்வதேச பட்டங்களை  வென்றுள்ள  ரோஜர் பெடரர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றி உள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபனில் 2004, 2006, 2007, 2010, 2017, 2018 ஆண்டுகளிலும்,  பிரெஞ்ச் ஓபனில் 2009ம் ஆண்டும்,  விம்பிள்டன்னில்  2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017 ஆண்டுகளிலும்,  யுஎஸ் ஓபனில் 2004, 2005, 2006, 2007, 2008ம் ஆண்டுகளிலும் கிராண்ட் ஸ்லாம்  பட்டங்களை வென்றுள்ளார். இது தவிர 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கமும்,  2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில்  ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

அடிக்கடி காயத்தால் அவதிப்பட்ட பெடரர் உள்ளே, வெளியே என்று அடிக்கடி ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கொரோனா பரவலுக்கு முன்பு இடுப்பு, முட்டிகளில் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட பிறகு மீண்டும் சர்வதேச களத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. ஆஸி ஓபனில் 2020ம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியதுதான்  அவர் கடைசியாக அவர் பெற்ற அதிகபட்ச வெற்றி.

*ஓய்வு குறித்து பெடரர், ‘கடந்த 3 ஆண்டுகளாக காயங்களால் பெரும் சவால்களை சந்தித்து வந்தேன். மீண்டும் களத்துக்கு திரும்ப கடுமையான பயற்சிகளை செய்தேன். அதற்கு உடல் தகுதி போதுமானதாக இல்லை. கடந்த 24 ஆண்டுகளில் 1500 ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். என்னை உற்சாகப்படுத்திய மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், டென்னிஸ் உலகத்துக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Roger Federer , Roger Federer retires
× RELATED ரோஜர் பெடரர் ஓய்வு