நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும்: டிடிவி தினகரன் பேச்சு

திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது; சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைத்திருக்காது. அண்ணா, எம்ஜிஆர், அம்மா என்ற பெயர்களில் உள்ள எழுத்துகள் உலகெங்கும் தமிழ் உள்ளவரை ஒலிக்கும்.

நான் ஒரு சாதாரணமான தொண்டன் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் நீங்கள் தான். அண்ணாவின் கொள்கைகளை பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச்சென்ற பெருமை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆருக்குத் தான் உண்டு. அமமுக அம்மாவின் கொள்கைகளை தாங்கி இருக்கின்ற இயக்கம். எத்தனை நூற்ராண்டுகள் ஆனாலும் ஜெயலலிதாவின் கொள்கை, லட்சியங்களை தமிழ் கூறும் நல் உலகிற்கு எடுத்துச் செல்கின்ற இயக்கம். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டி ஸ்டாலினையே பொதுச்செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன் திருந்தவில்லை , இப்போது அனுபவிக்கிறார்கள்.

கொங்கு மண்டலம் கோட்டை என்றார்கள் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்னாயிற்று?. தவறு செய்தவர்களும் துரோகம் செய்தவர்களும் நம்மை கண்டு பயப்படுகிறார்கள். எலி வளையானாலும் தனிவளை என்று அமமுக கூட்டம் உண்டு. விலைபோகாத சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும். பதவி ஆசை, பொருள் ஆசை இல்லாதவர்கள் அமமுகவின் தொண்டர்கள். நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றது என்ற செய்தியை கொண்டு வாருங்கள் இவ்வாறு கூறினார்.

Related Stories: