×

இனி எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மட்டும் தான்!: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பன்னீர்செல்வம் படங்கள் நீக்கம்..!!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் இருந்த பேனர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. உட்கட்சி மோதலால் அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மனு உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார். எனினும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர்கள் அகற்றப்படாமலேயே இருந்தன.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலக சாவியை பழனிசாமியிடம் கொடுத்தது செல்லும் என்றும் 2 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம் இருந்த பேனர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. புதிய பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதலுக்கு பிறகு செப்டம்பர் 8ம் தேதி முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சென்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.


Tags : MGR ,Jayalalitha ,Edappadi Palanisamy ,Panneerselvam , AIADMK head office, Panneerselvam, pictures removed
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...