தொடர் விபத்து சம்பவங்களை தடுக்க விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 165 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு சுமார் ரூ. 3,517 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்பட்டது. இச்சாலை அமைக்கும் பணிக்காக விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள், பொதுமக்கள் பலவருடங்களாக குடியிருந்த வீடுகள், சாலையோர கடைகள், வழிபாட்டு தளங்கள், மின்கம்பங்கள் ஆகியவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது.

 

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் ஆற்றுப் பாலங்கள், மேம்பால பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாலங்களுக்காக தோண்டப்பட்ட குழிகள் பாதியிலேயே பணிகள் கைவிடப்பட்டதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். இச்சாலை வழியாக அரசுப் பேருந்து, தனியார் பேருந்து மட்டுமின்றி டெல்லி, ஹரியானா, ஜார்க்கண்ட் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், உள்ளிட்டவைகளை கனரக வாகனங்களில் இச்சாலை வழியாக கொண்டு செல்கின்றனர்.

 

மேலும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களுக்கும் தேவையான தடவாள பொருட்கள் மற்றும் மின் சாதன பொருட்கள் என்எல்சி ஆர்ச் கேட் நூழைவுவாயில் வழியாக கொண்டு செல்கின்றனர்.

ஆம்புலன்ஸ்சுகள், தீயணைப்பு வாகனங்களும் செல்கிறது. இதனால் சாலையின் வளைவு பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது மட்டுமின்றி சில வாகனங்கள் ஆபத்தான முறையில் அதிவேகமாக செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை வளைவுப் பகுதி குண்டும் குழியுமாக மாறி சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.  

 

இப்பணிகள் துவங்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இப்பணியினை செய்த தனியார் ஒப்பந்த நிறுவனம் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளது. தற்போது, பேட்ச் ஒர்க் வேலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் நான்கு வழி சாலை பணியை முழுமையாக செய்து முடிப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

 

இதனை கண்டித்து என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக அமைப்புகள், போராட்டக் குழு அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரனை சந்தித்து பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ பேசினார். மேலும் சாலை பணிகளை விரைந்து முடிக்க சபா ராஜேந்திரன் எம்எல்ஏ தொடர் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தற்போது சாலை பணிகளை செய்து வருகின்றனர். சாலை பணியை விரைந்து முடித்தால் மட்டுமே இப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிரந்தர தீர்வு காண மற்ற முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: