×

நெற்பயிர்களை காப்பாற்ற மானிய விலையில் போர்வெல் அமைக்க சிறப்பு திட்டம்: விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை: மானிய விலையில் போர்வெல் அமைக்க சிறப்பு திட்டம் கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பதை அறிந்த சேதுபதி மன்னர்கள் ஆயிரக்கணக்கான கண்மாய் குளங்களை வெட்டி மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைத்து பெரிய அளவில் விவசாயம் செய்திடும் வகையில் உருவாக்கி வைத்துள்ளனர்.

இதனால் வறட்சி மாவட்டமாக இருந்த போதிலும் அதிகளவில் இந்த மாவட்டத்தில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் இந்த நீர் நிலைகள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான குளங்கள் காணாமல் போய் உள்ளது. அப்படி இருந்தும் இன்று வரை மாவட்டத்தில் 1லட்சத்து26 ஆயிரம்

ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீரை வைத்து இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர். சில சமயத்தில் கதிர் வெளிவந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கதிர் சாவி ஆகிவிடும். தண்ணீர் பாய்ச்ச வழி இல்லாமல் கண்மாய், குளங்கள் வறண்டு விட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர்.

இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர் நீராகவே இருந்து வருகிறது. சுமார் 1000 அடிக்கு மேல் போர்வெல் அமைத்தால் தண்ணீர் இருப்பதாக தற்போதைய தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது தெரிய வருகிறது. எனவே இப்பொழுது விவசாயிகள் கண்மாய்,குளங்களில் போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படும் போது போர்வெல் இருந்தால் நஷ்டம் இல்லாமல் விவசாயிகள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்தை காப்பாற்றி விடுவார்கள்.

போர்வெல் அமைக்க 5 முதல் 10 லட்சத்திற்கு மேல் செலவாகும். எனவே மானிய விலையில் போர்வெல் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருவாடானை பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் பெய்யும் சிறிய மழையை வைத்து நேரடி நெல் விதைப்பு செய்து, கண்மாயில் ஓரளவு தேங்கி இருக்கும் தண்ணீரை கொண்டு விவசாயத்தை சிறப்பாக செய்து விடுவோம்.

இந்நிலையில் கதிர் வெளிவரும் சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் முழு கதிரும் சாவி ஆகிவிடும். அது மாதிரி சமயத்தில் போர்வெல் இருந்தால் அதன் உதவியால் தண்ணீரை பாய்ச்சு நஷ்டத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு விவசாயிக்கும் மானியமாக போர்வெல் அமைக்க உதவி செய்ய முடியாவிட்டாலும் கன்மாயின் ஏதாவது ஒரு இடத்தில் மடை பகுதியை ஒட்டி மானிய விலையில் போர்வெல் அமைத்துக் கொடுக்க சிறப்பு திட்டம் உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Bourwell , Special scheme to set up borewells at subsidized cost to save paddy crops: Farmers insist
× RELATED டீசல் விலை உயர்வால் போர்வெல் வாகன...