திமுக நகராட்சி தலைவரை கொல்ல சதி: உடுமலையில் பரபரப்பு

உடுமலை: உடுமலை நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த மத்தீன் உள்ளார். இந்த நிலையில் அவரைக்கொல்ல சதி நடப்பதாகக் கூறி நேற்று இரவு திமுகவினர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கீரனூரை சேர்ந்த ஷேக் தாவூத்(23). இவர் நேற்று உடுமலை போலீசில் சரணடைந்தார். அப்போது அவர் போலீசில் கூறியதாவது: என்னை சிலர் காரில் ஏற்றிச்சென்றனர். செல்லும்போது போனில் இருந்த ஒரு போட்டோவை காட்டி அவரை கொல்ல வந்துள்ளோம் என்றனர்.

போட்டோவில் இருந்தவர் உடுமலை நகராட்சித்தலைவர் மத்தீன் என்பது எனக்கு தெரியும். உஷாரான நான் காரில் இருந்து தப்பி சரணடைந்தேன் என்று கூறினார். இதனையடுத்து போலீசார் நகராட்சித்தலைவரை போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் பொள்ளாச்சியில் இருந்து காரில் வந்து கொண்டிருப்பதாக கூறினார். தகவலை கூறிய போலீசார் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறினர். மேலும் அந்தியூர் பகுதி வந்ததும் அவரை போலீசார் பத்திரமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து சரணடைந்த ஷேக் தாவூத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே போலீஸ் நிலையத்தில் குவிந்த திமுகவினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷேக் தாவூத் கூறியதின் உண்மை தன்மை அறிய அவர் காரில் சென்ற பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிசி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: