×

கஞ்சா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைக்காக வாழ்க்கையை தொலைக்கும் இளைய சமுதாயம்; ஸ்டைலுக்காக ஆரம்பித்து பழக்கத்தை விட முடியாமல் தவிப்பு

பள்ளிகொண்டா: பறந்து விரிந்த இந்த மானுட உலகில் கடவுளால் மனிதன் படைக்கப்பட்டது அர்த்தமுள்ள ஒரு வாழ்வினை வழிப்போக்கன் போல் வாழ்ந்து விட்டு செல்வதற்கே. ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு உண்டாகும் சில விரக்திகளால் தவறான பாதைக்கு சென்று சீரழிந்து கொண்டு வருவது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. பிள்ளைகள் தவறான வழிக்கு செல்ல ஆரம்பிக்கும் போதே பெற்றோர்கள் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலான பெற்றோர்கள் அவ்வாறு செய்வதில்லை. இன்றைய வாழ்க்கை சூழலில் குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என்று இருவரும் பணிக்கு செல்ல வளர்ந்து வரும் பிள்ளைகளை கவனிப்பதற்கு நேரம் ஒதுக்க தவறி விடுகின்றனர். குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு சரியான நேரத்தில் சரியானவை கிடைக்காததே, தவறான பாதைக்கு செல்ல முதல் அடியாக உள்ளது.

சரியான படிப்புக்கு அதற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் திருப்தி இல்லாமல் வாழ்பவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். கல்லூரி பருவத்தில் சக நண்பர்களுடன் ஸ்டைலுக்காக ஆரம்பிக்கும் சிகரெட், மது நாளடைவில் அவனை அடிமைப்படுத்திவிடுகிறது. இப்படி போதைக்கு அடிமையாகுபவர்களை அவர்களது பெற்றோர்கள் கண்டறிந்து பாதுகாக்க வேண்டும். அடுத்தபடியாக இன்றைய சூழலில் பள்ளிக்கு செல்லும் 18க்கும் மிக குறைந்த வயதுடைய ஏராளமான மாணவர்கள் புகையிலை, கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி வருவது மனதை பதைபதைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. பள்ளி சீருடையில் பட்டப்பகலில் புகையிலையை பாக்கெட்டில் வைத்தவாறே செல்லும் காலகட்டத்தில் இன்றைய மாணவர்களின் நிலை உள்ளது என்று கல்வி நெறியாளர்கள் அவ்வப்போது குறிப்பிடத்தவறியதில்லை. அன்றைய பள்ளி பருவத்தில் ஆசிரியர்களிடத்தில் பயம் பண்புக்கு கட்டுப்பட்டு மாணவர்கள் கல்வி கற்றனர். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். மாணவன் மேல் ஒரு சின்ன கீரல் விழுந்தால் கூட ஆசிரியருக்கு தான் தண்டனையாக உள்ளது.

பெரும்பாலான அரசு ஆண்கள் பள்ளியில் சில மாணவர்கள் ஆசிரியர்களையே மிரட்டும் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன. தற்போது, புதியதாக உருவெடுத்துள்ள கஞ்சா போதை பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வேகமாக பரவி சமூகத்தின் எதிர்கால கட்டமைப்பை செல்லரிக்க செய்து வருகின்றன. இவற்றை எல்லாம் தடுத்து எதிர்கால சந்ததியரை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழக முதல்வர் கடந்த மாதத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் கூட்டத்தில் மிக கண்டிப்புடன் அதிகாரிகளிடத்தில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்வோரின் சொத்துகளை பறிமுதல் செய்து உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் கடந்த 1 மாதமாக புகையிலை, கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளை போலீசார் சோதனையில் களையெடுத்து வருகின்றனர். அரசு மட்டும் நினைத்தால் இந்த போதை பழக்கத்தை ஒழித்து விட முடியாது.

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உண்டு. வீட்டில் இருந்து பிள்ளைகள் ெவளியே செல்லும்போது, பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றது. 10581 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு கவுன்சிங் கொடுக்கவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தகுந்த மன நல மருத்தவரிடமும் தகுந்த கவுன்சிலிங் கொடுப்பதன் மூலம் அவர்களை மீட்டெடுக்க முடியும்.  மேலும், போதை தரும் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை அருகில் உள்ளவர்கள் கண்டறிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். இதுமட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் பான் மசாலா பொருட்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதலை அந்தந்த பள்ளி, கல்லூரி நிர்வாகம் அதனை உறுதி செய்திடல் வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களும்,  கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலையை விற்பனை செய்வோர் என சமூகத்தில் உள்ள  ஒவ்வொருவரும் இதில் பொறுப்பேற்று எதிர்கால வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வேண்டும். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். காவல்துறையினர் பள்ளி, கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பி வைப்பதோடு கடமை முடிந்து விடுகின்றது என எண்ணாமல் அவர்களது மனதில் நற்சிந்தனைகள் ஏற்படுத்துவதற்காக சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் ஆன்மீக சிந்தனைகளை விதைத்து திருத்தங்களை மேற்கொண்டால் ஆரோக்கியமான இளம் தலைமுறையினரை வளர்த்தெடுக்க முடியும். எதிர்காலத்தில் போதை இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : A younger community losing their lives to drugs including ganja, panmasala, tobacco; Start for style and struggle to let go of habit
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...