×

கூகுள் பே, போன் பே மூலம் கைமாறும் பணம்; குமரிக்கு ஆந்திராவில் இருந்து அதிகளவில் கஞ்சா சப்ளை: 10 பேர் கும்பலை பிடிக்க தீவிரம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்துக்கு அதிகளவில் ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளையாவது தெரிய வந்துள்ளது. தற்போது இது தொடர்பாக 10 பேர் ெகாண்ட கும்பல் பற்றிய தகவல் தனிப்படைக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி வேட்டை மூலம் கஞ்சா விற்பனை மற்றும் உபயோகிப்பாளர்களை கைது செய்து வருகிறார்கள். கஞ்சா விற்பனையாளர்களின் வங்கி கணக்குகள், சொத்துக்களும் முடக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்திலும் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக மாவட்டத்தில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 4 துணை போலீஸ் சரகங்களுக்கு தலா ஒரு தனிப்படையும்,  எஸ்.பி. நேரடி மேற்பார்வையில் ஒரு தனிப்படை, டி.ஐ.ஜி. மேற்பார்வையில் ஒரு தனிப்படை, ஐ.ஜி. நேரடி மேற்பார்வையில் ஒரு தனிப்படை என்று 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி வேட்ைட நடந்து வருகிறது.

கஞ்சா விற்பனையாளர்கள் மட்டுமின்றி, கஞ்சா உபயோகிப்பாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிலோ கணக்கில் கஞ்சா இருந்தால் தான் கைது நடவடிக்கை என்ற நிலை மாறி தற்போது ஒரு கிராம், 2 கிராம் கஞ்சா இருந்தாலே அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனை கும்பல் ஜாமீனில் வந்து விடாதபடி காவல்துறையினர் தேவையான ஆவணங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். கஞ்சா வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை வேண்டும் என்றும் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கஞ்சா கும்பல் கைது வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த வருடத்தில் இதுவரை கஞ்சா வியாபாரிகள் 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கஞ்சா உபயோகித்த பள்ளி சிறார்கள் சிலர் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பள்ளி, கல்லூரிகளில் அதிகளவில் கஞ்சா பரவி இருப்பது உறுதியானது. எனவே கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியை காவல்துறை நாடி உள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகளிலும் காவல்துறையின் ஹெல்ப் லைன் நம்பர் 7010363173 என்ற நம்பரை பிரபலப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில், தகவல் பேனர் வழங்கப்பட்டுள்ளது.
 
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்த பேனர் கண்டிப்பாக மாணவ, மாணவிகளின் பார்வையில் படும்படி கட்டப்பட்டு இருக்க வேண்டும். இந்த நம்பருக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை போன் செய்து தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் வெளியிடப்படாது. பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா உபயோகிக்கும் நபர்கள் அல்லது கஞ்சா சப்ளை செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என எஸ்.பி. கேட்டு ெகாண்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் இந்த வருடம் மட்டும் இதுவரை 145 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 8300 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கஞ்சா விற்பனை தொடர்பாக 152 புகார்களில் 277 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை பதிவு செய்யப்பட்டு 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் அதிகளவில் கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பஸ்கள், ரயில்கள் மூலமும், கொரியர் சர்வீஸ் மூலம் பார்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தி ஆன்லைன் ஆர்டர் மூலமும் கஞ்சா கொரியரில் அனுப்பப்பட்டு உள்ளது. இதை தடுக்கும் வகையில் கொரியர் நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகளவில் தகவல் கொடுக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் தகவல் வந்தால் தான் குற்றங்களை தடுக்க முடியும் என்று எஸ்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது பெரிய அளவில் கஞ்சா சப்ளையர்கள் குறித்த 10 பேர் கொண்ட கும்பல் குறித்த தகவல், தனிப்படைக்கு கிடைத்துள்ளது. அவர்களை குறி வைத்து தற்போது தேடுதல் வேட்டையை தனிப்படையினர் தொடங்கி உள்ளனர். எனவே விரைவில் அந்த கும்பல் சிக்க கூடும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் கெடுபிடி காரணமாக கஞ்சா வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக எளிதில் கிடைத்து வந்த கஞ்சா தற்போது, பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. R50, R100க்கு கிடைத்து வந்த கஞ்சா பொட்டலங்களின் விலை தற்போது R500, R1000ம் ஆக உயர்ந்துள்ளது. விலை அதிகரிப்பு காரணமாகவே பல கஞ்சா உபயோகிப்பாளர்கள் அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளது என்றும் காவல்துறையினர் கூறி உள்ளனர்.

டி.எஸ்.பி.க்கள் ஆய்வு: காவல்துறை சார்பில் வழங்கப்படும் பேனர்கள் பள்ளி, கல்லூரிகளில் முறையாக கட்டப்பட்டுள்ளதா? என்பதை  அந்தந்த சரக டி.எஸ்.பி.க்கள் ஆய்வு செய்வதுடன், பள்ளி, கல்லூரிகளில்  விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடக்கும் சமயங்களில் காவல்துறையினரும் பங்கேற்று, இது தொடர்பாக விளக்க வேண்டும் என்றும் எஸ்.பி. அறிவுறுத்தி உள்ளார்.

3 மொழிகளில் விழிப்புணர்வு வாசகம்: காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள பேனர்களில், தகவல் கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இடம் பெற்றுள்ளது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் மலையாளம் தெரிந்த மாணவ, மாணவிகள் அதிகம் உள்ளதுடன், குமரி மாவட்ட கல்லூரிகளில் அதிகளவில் கேரள மாணவர்கள் படிப்பதால் மலையாளத்திலும் வாசகம் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags : Andhra ,Kumari , Transfer money through Google Pay, Phone Pay; Heavy supply of ganja from Andhra to Kumari: Intensity to nab gang of 10
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்