×

எட்டயபுரம், கழுகுமலை அருகே பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து 28 ஆடுகள் பலி

எட்டயபுரம்: கோவில்பட்டி ராஜிவ் நகரை சேர்ந்தவர் சங்கர்ராஜா (40). இவர், எட்டயபுரம் அருகேயுள்ள குளத்துள்வாய்பட்டியில் உள்ள தோட்டத்தில் செட் அமைத்து 40 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றுவந்த ஆடுகளை தொழுவத்தில் அடைத்துவிட்டு அருகிலுள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு 15க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கம்பிவலை வழியாக உள்ளே சென்று ஆடுகளை கடித்து குதறின. இதில் 8 ஆடுகள் தொழுவத்திற்குள்ளே இறந்து கிடந்தன. 3 ஆடுகளை வெளியில் இழுத்து சென்று காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு சென்றன. இதுதவிர 20 ஆடுகள் காயமடைந்தன. வழக்கம்போல் அதிகாலையில் தொழுவத்திற்கு சென்று பார்த்த சங்கர்ராஜா அதிர்ச்சியடைந்தார்.

இதேபோல் நேற்று முன்தினம் குளத்துள்வாய்பட்டி இலங்கை முகாம் அருகேயுள்ள வளர்மதி (50) வீட்டில் கட்டியிருந்த 2 ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றன. 2 ஆடுகள் படுகாயமடைந்தது. தொடர்ந்து இப்பகுதியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழுகுமலை:  கயத்தாறு யூனியன் தெற்கு கழுகுமலை பஞ்சாயத்தை சேர்ந்த மாரீஸ்வரி, மகாலிங்கம், முனியசாமி, வேல்சாமி உள்ளிட்ட 5  பேருக்கு சொந்தமான 15 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறின. இதில் ஆடுகள் அனைத்தும்  செத்து மடிந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய் கடியில் காயமடைந்து உயிர்  தப்பியுள்ளன.

இதுகுறித்து மகாலிங்கம்  மற்றும் கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் வீடுகள்  தோறும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். பலருக்கு அரசின் இலவச ஆடுகளும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பஞ்சாயத்து முழுவதும் வெறிநாய்களின் அட்டகாசம்  அதிகரித்துள்ளது. மாலை  நேரத்தில் 20க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டமாக மேய்ச்சல் முடித்து  திரும்பும் ஆடுகளை கடித்து குதறுகின்றன. வெறிநாய்கள் அட்டகாசம் குறித்து புகார்  தெரிவித்தும் பஞ்சாயத்தில் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆடுகளை விரட்டும் நாய்களை நாங்கள் துரத்தினால் எங்களையும் விரட்டுகின்றன என்றனர்.

Tags : Ettiyapuram ,eagumala , Tragedy near Kalgukumalai, Ettayapuram: 28 goats killed by rabid dogs
× RELATED மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...