என்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியளிப்போம்; அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: என்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியளிப்போம் என அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

அதேபோல், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார். அண்ணா பிறந்தநாளையொட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி! உன்னைத்தான் தம்பி... என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் - ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் - நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: