×

உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் மாநாடு இன்று தொடக்கம் சீன அதிபரை புறக்கணிக்கும் மோடி : புடினுடன் தனியாக முக்கிய பேச்சு

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்றார். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்காமல், பிரதமர் மோடி புறக்கணித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை, இந்த நாடு தலைமை வகித்து நடத்தும். அந்த வகையில் 22வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு நேற்று புறப்பட்டு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய  அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர்  இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். கொரோனா தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக தலைவர்கள் அனைவரும் நேரடியாக பங்கேற்கும் முதல் ஷாங்காய் மாநாடு என்பதால், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் ரஷ்ய அதிபர் புடினும், இந்திய பிரதமர் மோடியும் தனியாக சந்தித்து பேச உள்ளனர்.

ஆசிய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, ஐநா மற்றும் ஜி20. அமைப்புக்கு இடையேயான  ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவதும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே நேரம், இந்த மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஜின்பிங்கை மோடி சந்திக்கவில்லை. இருவரும் சந்தித்து பேசுகிறார்களா? என்பதை இருநாடுகளும் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இதனால், இவர்களின் சந்திப்பு குறித்து மர்மம் நிலவுகிறது. ஜின்பிங் உடனான சந்திப்பை மோடி புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ரஷ்ய அதிபர் புடினும் கூட ஜின்பிங்கை சந்திக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.



Tags : Shanghai conference ,Uzbekistan ,Modi ,Putin , Shanghai conference in Uzbekistan begins today Modi ignores Chinese president: key talk alone with Putin
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...