குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தூத்துக்குடி  மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின்போது  சிலர், மும்பை பார்களில்  நடனமாடும் பெண்கள், திரைப்பட துணை நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு அதிக  பணம் கொடுத்து அழைத்து வந்து, பக்தர்களிடையே குத்து பாடல்களை ஒலிக்கச்  செய்து நடனமாடுகின்றனர். அரைகுறையாக உடையணிந்து, ஆபாசமாக  ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் இந்துக்களின் விரத முறை மீதான  நன்மதிப்பை குறைக்கிறது.

கடந்த 2017ல் கோயில் விழாக்களில் ஆபாசமான அங்க  அசைவுகளுடன் அரைகுறை ஆடைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது  என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உரிய முறையில்  நடைமுறை படுத்தப்படுவதில்லை.  எனவே, குலசை தசரா  நிகழ்ச்சிகளில் சினிமா  குத்து பாடல்கள் பாடி, ஒலிபரப்பி நடத்தப்படும் நடன  நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்  தரப்பில் கோயில் நிகழ்ச்சியில் ஆண், பெண் இணைந்து ஆபாசமாக மேடையில் ஆடுவது  போன்ற புகைப்படங்கள் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது.

அந்த படங்களை பார்த்து   அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், ‘‘கோயில் திருவிழாவில் எப்படி இதுபோன்ற  நிகழ்ச்சிகளை நடத்த கலெக்டர், எஸ்பி அனுமதிக்கின்றனர்?  குலசேகரன்பட்டினம் தசரா நிகழ்ச்சியில் இதுபோன்ற  ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. இந்த வருடம் தசரா  நிகழ்ச்சிகள் அனைத்தையும் கலெக்டர், எஸ்பி நேரடியாக கண்காணிக்க வேண்டும். கோயில்களில் கலாச்சார நிகழ்ச்சி  மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்த அனுமதிக்க  முடியாது. எனவே இதுதொடர்பாக உரிய வழிகாட்டுதலுடன் விரிவான உத்தரவு  பிறப்பிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: