×

போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறி வருவதால் அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

* அரைகுறை ஆடையுடன் இருக்கைகளில் தூக்கம்
* போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லாவரம்: அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் போதை ஆசாமிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பஸ் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள மிக முக்கியமான இடங்களான கோயம்பேடு, தியாகராய நகர், பிராட்வே, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் தினமும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் மருத்துவமனை செல்லும் முதியவர்கள் வரை ஏராளமானோர் தினமும் பல இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து துறை மூலம் அரசுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தின் உள்ளே போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு வந்து, பொதுமக்கள் முன்னிலையில் பேருந்து நிலையத்தின் உள்ளேயே வைத்து குடித்து விட்டு, காலி பாட்டில்களை கண்டகண்ட இடங்களில் வீசுவதுடன் பயணிகளுக்கான இருக்கைகளை ஆக்கிரமித்து, அரைகுறை ஆடையுடன் தாறுமாறாக படுத்து தூங்கி விடுகின்றனர். இதனால் பஸ்சுக்கு வரும் பயணிகள் முகம் சுழித்து செல்வதுடன், குழந்தைகளுடன் பெண்கள் தனியாக அனகாபுத்தூர் பேருந்து நிலையம் வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இத்தனைக்கும், பேருந்து நிலையத்தின் அருகிலேயே அம்மா உணவகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கடைகள் மற்றும் குடியிருப்புகள் என ஏராளமானவை அமைந்துள்ளன. குடிமகன்கள் குடித்து விட்டு உறங்குவது மட்டுமின்றி, அங்கேயே அமர்ந்து உணவருந்தி விட்டு, வாந்தி எடுத்து அசிங்கப்படுத்தி வருகின்றனர். போதை ஆசாமிகளின் இந்த செயலை தட்டிக் கேட்கும், பொதுமக்கள் மற்றும் பயணிகளை அவர்கள் ஆபாசமாக பேசி, தாக்க முயலும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இத்தனைக்கும் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் தான் சங்கர் நகர் போலீஸ் பூத் அமைந்துள்ளது. அவர்களும் கூட குடிமகன்களின் இந்த செயலை கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Tags : Anagaputhur , Safety of passengers at Anagaputhur bus stand in question as it becomes a den of drug addicts:
× RELATED பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27...