குன்னூரில் பரபரப்பு சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் 3 பேர் போக்சோவில் கைது

குன்னூர்: குன்னூரில் சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் பகுதியை சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் குன்னூர் சென்றுவிட்டு சேலாஸ் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியில் இவருக்கு தெரிந்த உலிக்கல் பகுதியை சேர்ந்த சீமராஜ் குட்டன் (28), எமரால்டு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (25), கிளன்மார்கன் பகுதியை சேர்ந்த பொனீஷ் குட்டன் (28) ஆகியோர் மது போதையில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சிறுமியை பார்த்ததும் சீமராஜ் குட்டன் காரில் அழைத்து சென்று வீட்டில் விடுவதாக கூறினார். இதை நம்பிய சிறுமி, அவரது காரில் ஏறினார். பின்னர் சிறுமியை வீட்டில் விடாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக  மிரட்டி வீட்டில் விட்டு சென்றனர். இது குறித்து சிறுமி உறவினர்களிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள், கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, 3 பேரையும் போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்து, குன்னூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: