மழைநீர் கால்வாயை மூடக்கோரிய விவகாரம் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயை மூடக்கோரிய மனுமீது நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல் ஆகும். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடி மாநகராட்சியின் 18வது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஆறாவது பிளாக்கில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் மூடப்படாமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் அதில் விழுந்து காயம் ஏற்படுவதாக, அப்பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு திரும்பி வரும் வழியில், திறந்து கிடந்த கால்வாயில் தரணிதரன் விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், இதுக்குறித்து ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மூடப்படாமல் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாயை மூடக்கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். மேலும் மூடப்படாமல் இருக்கும் மழைநீர் வடிகாலை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: