×

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்ந்ததால் குடிநீர் வரியும் உயர்வு

சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்ந்துள்ளதால், அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது.  

அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து ள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 12.5 லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும்போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.  இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன.  சென்னை மாநகராட்சி நிர்ணயித்த சொத்தின் ஆண்டு மதிப்பில் 7 சதவீதம் புதிய குடிநீர் வாரியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இது வழக்கமான நடைமுறை தான்.  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை. 2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Chennai Corporation , Due to the increase in property tax in the Chennai Corporation, the water tax has also increased
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...