கட்டிட தொழிலாளி போர்வையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்

பல்லாவரம்: பல்லாவரம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நேற்று முன்தினம் ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியை மறைந்து இருந்து கண்காணித்த போது, அங்கு கஞ்சா விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முஷரப் உசேன் (27) என்பதும், குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்வது போல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சென்னை, நங்கநல்லூர், இந்திரா நகர் 1வது தெருவை சேர்ந்த ஹரீஷ் (23) மற்றும் சீனிவாசன் (22) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: