×

சென்னை விமான நிலையத்தில் 12 பழைய விமானங்களை அகற்றும் பணி தொடக்கம்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 12 பழைய விமானங்களை அகற்றும் பணி தொடங்கியது. இதனால், இங்கு கூடுதல் விமானங்கள் நிறுத்தும் இடவசதி கிடைக்கும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை விமான நிலையத்தில் கடந்த பல வருடங்களுக்கு முன் என்இபிசி, கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ், டெக்கான் ஏர்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சேர்ந்த விமானங்கள் உள்நாட்டு போக்குவரத்துக்கு இயக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை.

இதை தொடர்ந்து என்இபிசி, கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 பழைய விமானங்கள், சென்னை விமானநிலையத்தின் வடமேற்கு பகுதியில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், என்இபிசி விமானங்கள் 4, ஜெட் ஏர்வேஸ் விமானம் 1 என 5 விமானங்கள், கடந்த ஆண்டு முறைப்படி தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத வகையில் விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன.இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் கிங்பிஷர் விமான நிறுவனத்தின் 7 விமானங்களில், 2 விமானங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன.

இப்பணியின்போது, அந்த விமானங்களில் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் இன்ஜின்கள் உள்பட தொழில்நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் தனித்தனியே பிரித்து எடுக்கப்பட்டன. அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மீதியுள்ள பழைய விமானங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதற்கான ஆயத்த பணிகளை அந்தந்த விமான நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. முதல்கட்டமாக, நேற்று முன்தினம் அந்த விமானங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்தது. இதன்பிறகு விமானங்களை அகற்றும் பணிகள் தொடங்கும். முதலில் அந்த விமானங்களில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள இன்ஜின்கள் உள்பட பல்வேறு உதிரிபாகங்கள் தனியே பிரித்து பாதுகாக்கப்படும்.

இந்த பணிகளின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரையில் விமான நிறுத்த கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், இந்த பழைய விமானங்கள் அகற்றப்படுவதால், கூடுதல் விமானங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி கிடைக்கும். இதுதவிர விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் பறவைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Chennai Airport , Removal of 12 old aircraft at Chennai Airport begins
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...