×

சென்னை ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் லிண்டா

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட செக் குடியரசின் லிண்டா பிரஹ்விர்தோவா தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வீடனின் ரெபக்கா பீட்டர்சனுடன் நேற்று மோதிய லிண்டா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் கர்மன் தண்டி (359வது ரேங்க்), முன்னாள் 5வது ரேங்க் வீராங்கனை யூஜெனி பவுச்சார்டுடன் (கனடா) மோதினார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்ததால் யூஜெனி தற்போது 902வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி கர்மன் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த யூஜெனி 6-2 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2வது செட்டில் அபாரமாக விளையாடிய கர்மன் தண்டி 5-2 என முன்னேறியதால் நிச்சயமாக வென்று பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், கடும் நெருக்கடி கொடுத்த யூஜெனி தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து முன்னேற... ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது. அதில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி கர்மனை திணறடித்த யூஜெனி 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 13 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னதாக நடந்த ஒரு ஒற்றையர் ஆட்டத்தில் சீனாவின் சாங் வாங் (6வது நிலை) 2-6, 3-6 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை நவ் ஹிபினோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இரட்டையர் பிரிவில் கனடாவின் கேப்ரியலா டப்ரவ்ஸ்கி (கனடா) - லூசியா ஸ்டெபானி (பிரேசில்) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் டெஸ்பினா பாபாமிஷெல் - கேத்தி ஸ்வான் (இங்கிலாந்து) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Tags : Linda ,Chennai Open , Linda advances to Chennai Open tennis quarterfinals
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!