×

3வது டி20 போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை: சாதிக்கும் முனைப்பில் ஹர்மன்பிரீத் மற்றும் கோ

பிரிஸ்டல்: இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளிடையே நடக்கும் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் இன்று இரவு 11.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதலில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், டெர்பியில் நடந்த 2வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. முன்னணி வீராங்கனைகள் சோபியா 5, வியாட் 6, ஆலிஸ் கேப்ஸி 4 ரன்னில் வெளியேற, கேப்டன் ஏமி ஜோன்ஸ் 17, பிரையோனி ஸ்மித் 16 ரன் எடுத்தனர்.

அதிகபட்சமாக  ஃபிரெயா கேம்ப்  51* ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மய்யா பவுஷியர் 34 ரன் (26 பந்து, 4 பவுண்டரி) விளாசினர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் ஸ்னேஹ் ராணா 3, ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய இந்தியா 16.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து வென்றது. ஷபாலி 20, ஹேமலதா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 79* ரன் (53பந்து, 13பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் 29* ரன்னுடன் (22 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த இணை 79 ரன் விளாசி அசத்தியது. மந்தனா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இங்கிலாந்து தரப்பில் ஃபிரெயா கேம்ப், ஷோபி எக்லெஸ்டோன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று நள்ளிரவு  பிரிஸ்டலில் நடக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Tags : India ,England ,Harmanpreet , India vs England in 3rd T20I today: Harmanpreet and Co on a roll
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது