×

சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை 3ம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவிலுள்ள சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளது என்று சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நேற்று வருகை தந்தார். அவரை அந்நிறுவனத்தின் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். கவர்னருக்கு நிறுவன இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன், நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் விளக்கினார்.

பின்னர் கவர்னர், பல்வேறு ஆய்வு வசதிகளைப் பார்வையிட்டார். மேலும் செம்மொழி நிறுவன வளாகத்திலுள்ள பூங்காவில் மரக்கன்றை நட்டார். அப்போது பேராசிரியர் சுந்தரமூர்த்தி, பேராசிரியர் பஞ்சநாதம், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நிறுவன  பணியாளர்கள் உடனிருந்தனர். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில்: இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் தமிழ் மொழியின் வளம் இந்திய சமூக நாகரீக வளர்ச்சியின் பிரதிபலிப்பாயிருக்கிறது என்றும் புகழாரம் சூட்டினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெருமுயற்சிகளைப் பாராட்டினார்.

இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியத்திலுள்ள அறிவு, தமிழ்க் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்கும் வகையில்  வழிவகை செய்வதின் வாயிலாகத் தமிழகத்திற்கு அப்பால் கொண்டுச் செல்ல முற்பட வேண்டும். இந்தியாவிலுள்ள சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், தமிழ் அல்லாத மாணவர்களைக் கவரும் வகையில், எளியவழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். அவை ஆக்கப்பூர்வமாகவும் எளிதாகவும், தமிழ் அல்லாதவர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்.

Tags : Governor ,Ravi , Some states keen to introduce Tamil as 3rd language in their schools: Governor RN Ravi speech
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...