×

தமிழக காவல்துறை சார்பில் மாணவர்களை நல்வழிப்படுத்த சிற்பி திட்டம்: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: காவல்துறையும்-மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்று பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல்துறையும் - மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமலும் தடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் மக்களையும் காவல் துறையையும் ஒன்றிணைக்கும் திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

அப்படி நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களை போல இது ஒரு முக்கியமான திட்டமாக ‘சிற்பி’ என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது. இதனுடைய பொருள் Students in Responsible Police Initiatives (SIRPI).சிற்பி’ என்று இந்த திட்டத்திற்கு பெயரை சூட்டி அதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி, மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல் துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு நான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை, நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.சிற்பி - என்கிற இந்த திட்டம், பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டம்.

இந்த திட்டத்தை, கடந்த 13.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன். அறிவித்த நேரத்தில் சொன்னேன், ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்த இருப்பதாக நான் அறிவித்தேன். சென்னை மாநகரில் உள்ள 100 அரசு பள்ளிகளில், பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் வீதம் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்படுகிறது. சிறுவர்களை இளமை காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூக பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்க இந்த திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிறார் குற்றச் செயல்களில் ஈடுபட குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கிறதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது. அதாவது சிற்பியை போல நாம் மாணவர்களை சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும். இதுகுறித்து காவல்துறையின் உயரதிகாரிகளிடம் நான் சில தகவல்களை கேட்டேன். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறீர்கள் என்று கேட்டேன். இந்த செயல் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவிகள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகளை காவல்துறை அதிகாரிகளும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் ஓன்று வழங்கப்படும்.

இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படும். மேலும், இந்த மாணவ, மாணவிகள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடத்தில் சொன்னார்கள். நம்முடைய சிறுவர்களை சமூக ஒழுக்கங்களோடு வளர்த்தெடுக்க வேண்டியது நம்முடைய கடமை. அவர்களை சிறப்பாக செதுக்கியாக வேண்டும். அப்படி உருவாகும் இளைஞர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள், செதுக்குவார்கள். இந்த பயிற்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக் கூடாது. அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது.

எந்தவிதமான புகாரும் வராமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைமுறைகளை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu Police ,Chief Minister ,M.K.Stalin ,Chennai , On behalf of the Tamil Nadu Police, Sculptor Program to guide the students: Chief Minister M.K.Stalin launched in Chennai
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...