×

கொளத்தூர் ஏரியில் கட்டப்பட்ட 43 ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

பெரம்பூர்: கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 43 கடைகளை நீர்வளத் துறை அதிகாரிகள் அகற்றினர். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர்- செங்குன்றம் சாலை மற்றும் 200 அடி சாலையில் கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கார் பழுது பார்க்கும் கடை மற்றும் புதிய கார்களை வாங்கி விற்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தன. ஏரியை ஆக்கிரமித்து கடைகள் செயல்பட்டு வந்ததால் மழைக்காலத்தில் நீர் வெளியேற முடியாமல் தண்ணீர் நிரம்பி ஊருக்குள் புகுந்து மக்கள் சிரமப்பட்டனர்.

எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் கடைகளை காலி செய்ய மறுத்துவிட்டனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, இன்று காலை நீர்வளத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில், கொளத்தூர் உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும்  மேற்பட்ட போலீசாருடன் வந்தனர்.

பின்னர் ஜெசிபி மூலம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 43 கடைகளை அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து கடைகளை இழந்த 15க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அழைத்துச்சென்று அங்குள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தங்கவைத்தனர். இதன்பிறகு அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு நீர் வழித்தடத்தின் பாதை சரிசெய்யப்பட்டது. ‘’மழைக்காலத்தின்போது அப்பகுதியில்  தடையின்றி தண்ணீர் செல்ல முடியும். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kolathur Lake , Demolition of 43 encroachment shops built on Kolathur Lake
× RELATED அதிநவீன இயந்திரம் மூலம் கொளத்தூர் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரம்