×

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை நீடிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக நீடிக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 28,944 கனஅடியாக அதிகரித்த நிலையில், அணையில் இருந்து 26,349 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 16,657 கனஅடியாகவும், அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 19,667 கனஅடியாகவும் உள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால், நேற்று மாலை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்குவதற்கான அனுமதி மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து இன்று காலையும் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. இதனால் பரிசல் இயக்க, அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 40 ஆயிரம் கனஅடியாகவும் பின்னர் 50 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலையும் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 27,000 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும். நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

Tags : Ogenacal Kavieri , Water flow in Okanagan Cauvery increases to 57,000 cubic feet: Parisal operation, ban on bathing in waterfall extended
× RELATED ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57...