×

ரூ.16 கோடி மதிப்பீட்டில் 65 திருத்தேர் பணிகள், 131 திருக்குளப் பணி நடைபெற்று வருகின்றன; அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ரூ.25.6 கோடி மதிப்பீட்டில் 131 திருக்குளத் திருப்பணிகளும், ரூ.16 கோடி மதிப்பீட்டில் 65 திருத்தேர் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களின் திருக்குளம் மற்றும் திருத்தேர் திருப்பணிகள் தொடர்பாக  சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் திருக்குளங்கள் சீரமைக்கும் வகையில் சென்னை 1 மண்டலத்தில் ரூ.5.9 கோடி மதிப்பீட்டில் 12 பணிகள், மதுரை மண்டலத்தில் ரூ. 4.96 கோடி மதிப்பீட்டில் 10 பணிகள், வேலூர் மண்டலத்தில் ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் 13 பணிகள், தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ. 2.62 கோடி மதிப்பீட்டில் 10 பணிகள், மயிலாடுதுறை மண்டலத்தில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டிலும் 25 பணிகள், விழுப்புரம் மண்டலத்தில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் 13 பணிகள் உள்ளிட்ட 20 மண்டலங்களில் ரூ.25.6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 131 திருக்குளத் திருப்பணிகள் குறித்து.

 திருக்கோயில்களுக்கு புதிய திருத்தேர் உருவாக்கம் மற்றும் புனரமைக்கும் வகையில் விழுப்புரம் மண்டலத்தில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் 7 பணிகள், மயிலாடுதுறை மண்டலத்தில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் 5 பணிகள், மதுரை மண்டலத்தில் ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் ஒரு பணி, காஞ்சிபுரம் மண்டலத்தில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் 3 பணிகள், திருவண்ணாமலை மண்டலத்தில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் 3 பணிகள் உள்ளிட்ட 20 மண்டலங்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 65 திருத்தேர் திருப்பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.

திருக்குளங்கள் மற்றும் திருத்தேர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், திருத்தேர் திருவீதியுலாவின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மிகுந்த கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை  வழங்கினார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruthera ,Thirukkula ,Minister ,Shekharbabu , 65 Thiruthera works and 131 Thirukkula works are in progress at an estimated cost of Rs.16 crores; Information from Minister Shekhar Babu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...