×

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு...போலீசார் விசாரணை

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 என்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தனியாருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் இன்று வழக்கம் போல் கட்டட பணியாளர்கள் பணியில் இருந்தப் போது திடீரென அந்த லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சம்பவமானது காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்து கட்டடத்தின் உரிமையாளர் போலீசாருக்கு 11 மணியளவில் தகவல் தெரிவித்ததாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டடத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சஞ்சய் பாபுபாய் நாயக், ஜெகதீஷ் ரமேஷ்பாய் நாயக், அஷ்வின்பாய் சோமாபாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், ராஜ்மல் சுரேஷ்பாய் கராடி, பங்கஜ்பாய் சங்கர்பாய் கராடி உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 8 பேரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்; மேலும் அவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இந்நிலையில் கட்டடத்தில் வேலை செய்த ஊழியர்களின் உறவினர்கள், விபத்து நடந்தவுடன் ஏன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை? ஏன் தாமதமாக தெரிவித்தனர்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Ahmedabat , AHMEDABAD, LIFT , 8 LABOR, CASUALTY, POLICE
× RELATED 2 இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.57...