×

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் கடந்து செல்ல முடியும் வைகை வடகரை சாலை பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

*சர்வே எடுக்கும் பணிகள் ஜரூர்

*வாகன ஓட்டிகள் அமோக வரவேற்பு

மதுரை : சர்வே பணி நடந்து வரும் வைகை வடகரை சாலைப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நிறைவு பெற்றால் மதுரையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக கடந்து செல்ல முடியும்.மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1572.53 கிமீ நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளும் உள்ளன. ஆனால் இச்சாலைகளால் போக்குவரத்து பிரச்னை தீரவில்லை. ஒத்தக்கடை, கருப்பாயூரணி, அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சமயநல்லூருக்கு சென்று அங்கு நான்குவழிச்சாலையை அடைய நீண்ட நேரம் ஆகும்.

காரணம், கடும் போக்குவரத்து பிரச்னை மதுரை மாநகருக்குள் உள்ளது. இதனால் வைகை வடகரை மற்றும் தென்கரை சாலைகள் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமல் வைகை ஆற்றை சுருக்கி அமைத்தனர். மேலும் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வைகை ஆற்றுக்குள் இறங்க வழியில்லாமல் வைகைக்கரை சாலையை அமைத்தனர்.

மேலும் இத்திட்டம் முழுமை பெறவில்லை. இந்நிலையில், மதுரை நகருக்குள் ஆரப்பாளையத்தில் திண்டுக்கல் ரோடு மேம்பாலம் துவங்கி ரிங்ரோட்டில் ராமேஸ்வரம் சந்திப்பு வரை வைகை ஆற்றின் இரு பக்க கரையோரங்களில் சாலை அமைத்து, திறக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தும் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆரப்பாளையம் திண்டுக்கல் ரோடு மேம்பாலம் துவங்கி வைகை ஆற்றின் ஒரு பகுதியில் 8 கி.மீ., தூரத்திற்கு சமயநல்லூர் வரை இரண்டாம் கட்டமாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

 இதற்காக மதுரை கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவினர் ரூ.100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும் ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆரப்பாளையத்தில் திண்டுக்கல் மேம்பாலம் முதல் சமயநல்லூர் வரை வைகைக்கரை சாலை அமைப்பதற்கு சர்வே பணி துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் 8 கி.மீ., தூர சாலை அமைப்பதற்காக சர்வே பணியை மதுரை மேற்கு உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன் தலைமையில் உதவிப்பொறியாளர் சதீஷ்அஜய், ஜிஎஸ் ஆலோசகர் ராஜேந்திரன், சாலை ஆய்வாளர் மூர்த்தி உள்பட சாலைப்பணியாளர்கள் செய்து வருகின்றனர். சர்வே பணி விரைவில் முடிவடைந்து விடும்.

அதன்பின்னர் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும். இச்சாலைப்பணி முடிவடைந்தால் மதுரையின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வாகனங்கள் கடந்து செல்ல முடியும். மேலும் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்குள் வரும் வாகனங்கள் இச்சாலை வழியாக ரிங்ேராட்டை அடைந்து ராமேஸ்வரம் சந்திப்பு சாலையை எளிதில் கடந்து செல்ல முடியும். அதுபோல சிவகங்கை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் வைகைக்கரை சாலையை பயன்படுத்தி எளிதில் சமயநல்லூருக்கு சென்று அங்கிருந்து நான்குவழிச்சாலையில் பயணம் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வைகை ஆற்றின் குறுக்கே பரவை - துவரிமான் இணைக்கும் வகையில் ரூ.21 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் வந்து பரவை வழியாக சமயநல்லூர் சென்று, அங்கிருந்து நான்கு வழிச்சாலையில் பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் இந்த பாலத்தை கட்டி முடித்தும், அதன் ஓரங்களை இணைக்கும் பகுதியில் வீடுகள் இருப்பதால், அதனை கையகப்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். இதனால் அந்த பாலத்தை முழுமையாக வாகனப் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மாநகராட்சி பராமரிக்கும் சாலைகளின் வகைகள்

மாநகராட்சியானது மொத்தம் 947.94 கிமீ நீளமுள்ள தார்சாலைகள், 268.99 கிமீ நீளமுள்ள சிமென்ட் சாலைகள், 125.50 கிமீ நீளமுள்ள கற்சாலைகள் மற்றும் 207.52 கிமீ நீளமுள்ள மண் சாலைகளை பராமரித்து வருகிறது. மதுரை மாநகராட்சியின் வருவாய் நிதியிலிருந்தும் அரசு மானியம் மூலமும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி மூலமும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Vaigai Vadakarai , Madurai: An allocation of Rs.100 crore has been made for the Vaigai Vadakarai road work where the survey work is going on. If this work is completed
× RELATED மதுரையில் கூடுதல் இணைப்பு பாலம்...