×

கோவை அரசு மருத்துவமனையில் 8 மாதத்தில் எலி மருந்து குடித்து சிகிச்சைக்கு வந்த 33 பேர் மீட்பு

கோவை  : கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதத்தில் எலி மருந்து குடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 33 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: எலி பாசனத்தை சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதிலுள்ள, மஞ்சள் பாஸ்பரஸானது தோல், குடல் மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் இருக்கும் திசுக்களால் எளிதாக உறிஞ்சப்படுகிறது. இது குடல், கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இது தொடர்பான ஆய்வுகளில் இருந்து வந்த முடிவுகளில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதை தொடர்ந்து தேசிய சுகாதார குழுமமும், தமிழக அரசும் சேர்ந்து அதற்கான சிகிச்சைகளை பற்றி சில வரைமுறைகளை வகுத்து அளித்துள்ளனர்.

அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்தவுடன், உயர் சிகிச்சைக்காக மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமை மருத்துவமனைகளில் உறுப்புகளுக்கு பாதிப்பு இல்லை என்றால் சிகிச்சை அளிக்கலாம். உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மேல் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அதற்கான மேல் சிகிச்சை அளித்தால் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்காக பிளக்ஸ் மெஷின் என்ற நவீன கருவிகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

எலி மருந்து விஷம் ரத்தத்தில் கலந்திருப்பதால் ரத்தத்தில் இருக்கும் விஷத்தை எடுப்பதன் மூலம் அதனுடைய வீரியத்தன்மை குறைத்து உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. இதற்கு பிளாஸ்மா எக்ஸ்சேஞ் என கூறப்படுகிறது. விஷத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் பிளாஸ்மாவை எடுத்துவிட்டு அதற்கு சமமான பிளாஸ்மா ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டு அந்த நபருக்கு செலுத்தப்படுகிறது. இது ஒரே நபருக்கு 3-முறை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்யப்படும். இதைத்தொடர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்வாரியாக குணம் அடைந்து செல்கின்றனர்.

இந்த பிளாஸ்மா எக்ஸ்சேஞ் செயல் முறைக்கு முன்பு உயிரிழப்புகள் அதிகமாக இருந்த நிலையில் தற்போது, பிளாக்ஸ் சிகிச்சையினால் உயிரிழப்புகள் குறைகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை அனுமதிக்கப்பட்ட 42 நோயாளிகளுக்கு பிளக்ஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 33 பேர் உயிர் பிழைத்துள்ளனர். மற்ற 9 நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பொதுமக்கள் இதை கருத்தில் கொண்டு எலி மருந்து சாப்பிடும் நபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த மாதிரியான எலி பாசானத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Govai Government Hospital , Coimbatore: 33 people admitted to Coimbatore government hospital for treatment after consuming rat poison in the last 8 months have survived.
× RELATED கருப்பு பூஞ்சைக்கு முதியவர் பலி