×

மூணாறு அருகே ஆட்டோவை அடித்து நொறுக்கி காட்டுயானை அட்டகாசம்-250 கிலோ அரிசியையும் தின்று தீர்த்தது

மூணாறு : மூணாறு அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, ஆட்டோவை அடித்து நொறுக்கி, அதிலிருந்த 250 கிலோ அரிசியையும் தின்று தீர்த்தது.
ேகரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் காட்டுயானையின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. மூணாறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது.

இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. இந்நிலையில், மூணாறில் கண்ணன்தேவன் நிறுவனத்திற்கு சொந்தமான கடலார் எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கிருந்த மோகன்ராஜ் என்பவரின் ஆட்டோவை அடித்து நொறுக்கி, ஆட்டோவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ அரிசியை தின்று தீர்த்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூணாறிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்று தமிழக அரசு பஸ்சை, காட்டு யானை தும்பிக்கையால் தாக்கியதில், பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல், பூப்பாறையை அடுத்த சாந்தன்பாறை கிராம பஞ்சாயத்தில் ஆனையிறங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் காட்டுயானை அடித்து நொறுக்கியது. கடந்த சில மாதங்களில் 4 முறை இங்குள்ள ரேஷன் கடையை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மூணாறு பகுதியில் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : Thurai , Munnar: A wild elephant entered a residential area near Munnar, smashed an auto and stole 250 kg of rice from it.
× RELATED சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு...