×

போரில் தளபதி மரணம்; மனைவிகள் சிதையில் உயிர் துறப்பு சரித்திரம் சொல்லும் சேவூர் அடுக்கு நிலை நடுகல்-சதிக்கல்

அவிநாசி : குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த நிலப்பரப்பாக விளங்கும் இந்த கொங்கு மண்டலத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.அவிநாசி அருகே, சேவூரில், 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான சரித்திரம் சொல்லும் வகையில் உள்ள பழமையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என்கிற சிதிலமடைந்த சிற்பம்  கண்டறியப்பட்டுள்ளது.

அவிநாசி அருகே, சேவூரில், புளியம்பட்டி ரோட்டின் ஓரப்பகுதியில்  நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மழை காரணமாக மண்ணில் புதைந்திருந்த நடுகல்லின் ஒரு பகுதி வெளியே தெரிய ஆரம்பித்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லைச்சுத்தம் செய்து ஆய்வு செய்தார். இந்த நடுகல் குறித்து முடியரசு கூறியதாவது: சிதிலமடைந்த சிற்பம் இது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் ஆகும். முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடதுகையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவுபட்டுள்ளது.

 யாரை எதிர்கொள்கிறான் என்பது இதனால் தெரியவில்லை. இப்போரில் அவன் இறந்துவிட்டதால் அவனது இரு மனைவியரும் சிதையில் விழுந்து உயிர் துறந்துள்ளனர். அடுத்த நிலை தேவ கன்னியர் இருவர் வலது இடது புறங்களில் சூழ இறந்த வீரனையும் அவனது இரு மனைவியரையும் வானுலகம் அழைத்துச் செல்தல் ஆகும். தேவ கன்னியரின் கரத்தில் சாமரம் வீசுவது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது நிலையில் வீரனும் இரு மனைவியரும் சிவலோகப் பதவி அடைகின்றனர். நந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலையாக வீரன் சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து சிவபதம் சேர்தல் ஆகும்.

இந்த வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். வீரன் மற்றும் அவனது மனைவியரின் ஆடை அணிகலன்களை கொண்டு நோக்கும்போது இது புலப்படுகிறது. இக்கல் 6 அடி உயரமும் 4 அகலமும் 5 இஞ்ச் கனமுள்ள பலகைக்கல்லால் ஆனதாகும். இவ்வாறு கூறினார். இது அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக்கல்லை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், அன்றைய தினமே பாதுகாப்பாக சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. மேலும் அகழ்வாய்ப்பக அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை இந்த சதிக்கல்லை யாரும் வந்து எடுத்து செல்லவில்லை.

Tags : Nadukal , Avinasi: Humans have been living in this Kongu zone for about 3 thousand years, which is a landscape of Kurinji and Mulla.
× RELATED அரசு அருங்காட்சியகத்தில் 700 ஆண்டு பழமையான நடுகல் காட்சிக்கு வைப்பு