அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மூல வைகை அணை திட்டம் செயல்படுத்தப்படுமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு : தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது மூல வைகை ஆறு. இப்பகுதியில் 1984ம் ஆண்டு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடைப்பட்ட மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அப்போதிருந்த அதிமுக ஆட்சி இத்திட்டத்திற்காக முன்னெடுப்பு பணிகள் எதுவும் எடுக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வருகின்ற ஆற்று தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது. எனவே, தண்ணீரை பாதுகாப்பதற்கும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே இப்பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று நீர் பாசனங்கள் ஆழ்துளை கிணற்றுப் பாசனங்கள் இதுபோன்ற பாசங்களின் மூலம் மிகவும் பாதிப்படைந்து விவசாயம் செய்ததாகவும் கூறினர். இதனை தொடர்ந்து டெல்லி, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து சிறப்புக்குழு ஒன்று மூல வைகை ஆற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணியை மேற்கொண்டது. ஆனால், விரைவில் இந்த திட்டத்தின் மூலம் புதிய மூல வைகை அணை திட்டத்தை நிறைவேற்றி விடுவோம் என அதிகாரிகள் கூறிச் சென்றார்கள். ஆனால், அப்போதிருந்த அதிமுக ஆட்சியால் அலட்சியத்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தி கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘வருசநாடு பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மலையும், மலை சார்ந்த 150க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. மேலும் மூல வைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் குடிநீர் சப்ளைக்கும், விவசாயத்திற்காகவும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும்.’’ என்றனர்.

இதுகுறித்து வருசநாடு மக்கள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலைகளை காக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்தது, தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது.

கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி பகுதிகளில் பல கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு சென்றால் இப்பகுதிகளில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வராது. இதற்கு பல முறை அதிமுக அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வருசநாடு சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் மழைக்காலங்களில் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படுகிறது. ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றினால் பல லட்சம் ரூபாய் வருவாயையும் ஈட்ட முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து

பாதுகாக்க வேண்டும், என்றார்.

விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் முன்னெடுக்கும் முதல்வருக்கு பாராட்டு

கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் விவசாய வளர்ச்சிக்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதுபோல், குடிநீர் சப்ளைக்கும், விவசாயத்திற்கான மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: