×

கோடங்கிபாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் வெடித்து குமுறும் கல்குவாரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

*இருதரப்பினருடன் கலெக்டர் முன்னிலையில் அமைச்சர் பேச மக்கள் வலியுறுத்தல்

பல்லடம் : பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் கல்குவாரி பிரச்னைக்காக இரண்டு அமைப்புகளின் சார்பில் தனித்தனியாக இரண்டு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாவட்டத்தில் 110 கல்குவாரிகள், 120 கிரசர்கள் இயங்கி வருகிறது. தினசரி ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மில் உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் தனி நபராக கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை தனது இடத்தில் நிழற்பந்தல் அமைத்து நடத்தி வருகிறார்.

அவருக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,நொய்யல் ஆறு ராஜவாய்க்கால் ஏரி குளம் நீர் மேலாண்மை பாதுகாப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்,நேர்மை மக்கள் இயக்கம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்,10 ரூபாய் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் விவசாயி செந்தில்குமாரின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் வரும் 15ம் தேதி திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க இருப்பதாக நொய்யல் ஆறு ராஜவாய்க்கால் ஏரி, குளம், நீர் மேலாண்மை பாதுகாப்பு விவசாயிகள் சங்க தலைவர் திருஞானம் தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் கல் குவாரிகளில் முறைகேடு நடைபெறுவதாக கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு பொய் புகார் அளிப்பதை கண்டித்தும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு கல்குவாரி, கிரசர் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் குடும்பத்தினருடன் பங்கேற்ற  ஒரு நாள் அடையாள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கோடங்கிபாளையத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இடத்தில் நடைபெற்றது.

உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தமிழ்நாடு கல்குவாரி ஜல்லி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.சின்னச்சாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் 63 வேலம்பாளையம் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

  கல்குவாரி, கிரசர் தொழிலை விவசாயிகள் என்ற போர்வையில் சீர்குலைக்க பார்க்கின்றனர். அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி பெற்று நடைபெற்று வரும் கல்குவாரி, கிரசர் தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரி, கிரசர்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். இதன் மூலம்  திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரி, கிரசர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.  

இதன் மூலம் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இது குறித்து சங்க மாநிலத் தலைவர் சின்னச்சாமி கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை அனுமதியுடன்  கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும், சுற்றுச் சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும்,  குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரி தொழில் செய்து வருகின்றோம்.

 கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சாலை பணி, அரசு கட்டிட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டிட பணிகளின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.  அனைவரும் அரசிற்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டண தொகையையும்  செலுத்தி வருகிறோம்.

சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய் பல கோடி கடன் பெற்று மாத தவணைகள் செலுத்தி வருகிறோம். இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர். நிலையில் சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அலுவலகங்களுக்கு சென்று கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்.கல் குவாரி உரிமையாளர்களிடம்  அவர்களின் பணிக்கு இடையூறாக  பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், மேலும் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர்.

இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. சட்டபூர்வமாக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பணம் பறிக்கும் முயற்சியில் சமூக போராளிகள் என்கிற போர்வையில் மிரட்டல் போக்கை கையாளுகின்றனர் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் மாவட்ட சங்க செயலாளர் 63 வேலம்பாளையம் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தாக விவசாய பயன்பாடு இல்லாத நிலத்தில் அரசின் பல்வேறு துறை அனுமதி பெற்று கடந்த மூன்று தலைமுறைகளாக கல்குவாரி தொழில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு அரசின் திட்டப்பணிகளுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களின் கனவு இல்லம் கட்டும் பணிகளுக்கும் தேவையான ஜல்லி கற்கள், எம்.சான்ட், பி.சான்ட் உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

இத்தொழில் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும், வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். சிலர் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கனிம வளக் கொள்ளை நடப்பதாக பொய்யான புகாரை திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். நாங்கள் வெளிப்படை தன்மையுடன் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தொழில் செய்து வருகிறோம். இத்தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இது போன்ற பொய் புகார்தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘விவசாயிகளும், விவசாயமும் பாதிக்கக்கூடாது அதே சமயம் கல்குவாரி தொழிலும் பாதிப்படையக் கூடாத வகையில் இப்பிரச்சனைக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து  கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags : kodangipalayam , Palladam: In Kodangipalayam, near Palladam, two organizations have held separate meetings for the Kalquari issue.
× RELATED பெண் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது