கலை நிகழ்ச்சிகள் பெயரில் ஆபாச நடனம்!: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா. 10 நாட்கள் விமர்சியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் கலந்துக் கொள்வார்கள். இந்நிலையில், திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தசரா திருவிழாவில் இரவு நேரங்களில் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மும்பை பார் நடன மங்கையர், சினிமா துணை நடிகைகள், நாடக நடிகைகளை அழைத்து வந்து ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அரை குறை ஆடைகளுடன் நடன நிகழ்ச்சி நடத்துவதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாச நடனங்களுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை அமல்படுத்தவில்லை என்று மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆண், பெண் சேர்ந்து ஆடும் ஆபாச நடன வீடியோவை நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் இடைக்கால தடை விதித்தார். பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை என்பதை தூத்துக்குடி எஸ்.பி., ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். கோயில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என நீதிபதி கூறினார். மேலும், கோயில்களில் ஆடல், பாடல் நடத்துவது குறித்து விரிவான வழிகாட்டு உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: