×

கோட்டாரில் பேட்ஜ் ஒர்க் முடிந்த 1 வாரத்தில் பாதாள சாக்கடைக்காக மீண்டும் சாலையை தோண்டி குழாய் பதிப்பு -போக்குவரத்து மாற்றம் அமல்

நாகர்கோவில்  : கோட்டாரில் பாதாள சாக்கடை பணிக்காக மீண்டும் சாலையை தோண்டி குழாய் பதிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது முக்கிய சந்திப்புகளில் பிரதான குழாய்களை இணைக்கும் பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கோட்டார் சவேரியார் ஆலய ஜங்சன் பகுதியில் பாதாள சாக்கடைக்காக குழாய்கள் இணைக்கும் பணி நேற்று (13ம் தேதி) தொடங்கியது. இதற்காக சவேரியார் ஆலய சந்திப்பில் ேஜசிபி மூலம் சாலை ேதாண்டப்படுகிறது.

இந்த பணியையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி வடசேரியில் இருந்து மணிமேடை, வேப்பமூடு, அண்ணா பேருந்து நிலையம், சவேரியார் ஆலய சந்திப்பு மார்க்கமாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து வேப்பமூடு ஜங்சன், பொதுப்பணித்துறை சாலை வழியாக செட்டிகுளம் ஜங்சன் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து சவேரியார் ஆலய சந்திப்பு வந்து, வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.

 சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் ஒரு புறம் மட்டுமே சாலை தோண்டப்படுவதால், மறுபுறம் வழியாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதே போல் கலெக்டர் அலுவலக ஜங்சனில் இருந்து ரயில் நிலையம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் நேராக செட்டிகுளம் ஜங்சன் வழியாக செல்ல வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஏ.ஆர். கேம்ப் ரோடு, ராமன்புதூர் ஜங்சன் வழியாக செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று காலை 10 மணி முதல் அமலுக்கு வந்தது. வாகன ஓட்டிகளை திருப்பி விடும் வகையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 5 நாட்கள் வரை இந்த பணிகள் நடக்கும் என கூறப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக, அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து வேப்பமூடு, செட்டிக்குளம் வரை செல்லும் சாலை இரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் பல மாதங்களாக சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. அப்போது இந்த குழாய் பதிப்பு பணிகளை மேற்கொள்ளாமல், தற்போது இந்த சாலையில் பேட்ஜ் ஒர்க் முடிந்து ஒரு வாரத்தில் மீண்டும் சாலையை தோண்டுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சாலையை தோண்டும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலர், பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலை பணி முடிந்த பின், தோண்டுவது ஏன்?

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பாதாள சாக்கடை பணியை மேற்கொண்டு வரும் நிறுவனத்துக்கு பணம் பாக்கி உள்ளது. இந்த பிரச்னை காரணமாக காண்ட்ராக்டர் பணியை செய்யாமல் இருந்தார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி பணி தொடங்க இருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காரணமாக பணி செய்ய முடிய வில்லை. விநாயகர் சதுர்த்தி முடிந்த 2வது நாளில், ராகுல்காந்தி பயணம் இருந்தது. இதனால் தற்காலிகமாக அந்த ரோட்டில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டது. தற்போது சாலை தோண்டப்பட்ட பின், அந்த பகுதியில் கான்கிரீட் அமைத்து சமன்படுத்தப்படும். சாலை முழுவதும் தோண்டப்பட வில்லை. இணைப்பு பகுதிகள் மட்டும் தோண்டப்படுகிறது என்றனர்.

Tags : Amal , Nagercoil: The road is being re-excavated and piped for underground sewer work in Kottar. Underground sewer in Nagercoil
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...