கர்நாடகாவிற்கு யானை தந்தங்கள் கடத்த முயன்ற 4 பேர் கைது-ஒருவர் தலைமறைவு

அந்தியூர் : கர்நாடகாவிற்கு 4 யானை தந்தங்களை விற்பனைக்காக கடத்த முயன்ற 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து தந்தங்களை பறிமுதல் செய்தனர். ‘ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு யானை தந்தங்களைக் கடத்தப் போவதாக மாவோயிஸ்ட் தடுப்பு சிறப்பு தனிப்பிரிவு (பவானி கோட்ட மலையடிவார கிராமங்கள்) ஏட்டு தேவராஜூக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ஏட்டு தேவராஜ் விசாரணை நடத்தினார்.

இதில் கவுந்தபாடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட குண்டு செட்டிபாளையம் மேட்டாகாட்டூரை சேர்ந்த கருப்புசாமி மகன் சந்திரசேகர் 4 யானை தந்தங்களை கர்நாடகாவிற்கு கடத்த இருந்ததை ஒப்புக் கொண்டார். பின்னர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டரை அடி நீளம் உள்ள 4 தந்தங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் இவருக்கு யானை தந்தங்களை வழங்கியது அந்தியூர் வரட்டுபள்ளம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த ராசு (37), பர்கூர் கல்வாரையை சார்ந்த மைக் செட் சுப்பு (37), செல்லப்பன் (32), பர்கூர் தாமரகைரை காடை ஈரட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்தது. இதைடுத்து மைக்செட் சுப்புவை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்து 4 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.தலைமறைவான மைக்செட் சுப்புவை தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சந்திரசேகரிடம் ராசு, மைக்செட் சுப்பு, செல்லப்பன், மகேந்திரன் ஆகியோர் 4 தந்தங்களை வழங்கி விற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அதற்கு கமிஷனாக பணம் தருவாகவும் கூறினர். இதையடுத்து சந்திரசேகர் யானை தந்தங்களை விற்க கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது. பின்னர் கைதானவர்கள் மற்றும் யானை தந்தங்களை அந்தியூர் வட்ட வன ஆய்வாளர் மோகன்ராஜ், உதவி ஆய்வாளர் கார்த்தி முன்னிலையில் உத்திரசாமி(வனசரகர் அந்தியூர்) ராஜா(வனசரகர் சென்னப்பட்டி), கணேஷ்பாண்டியன்(வனசரகர் டி.என் பாளையம்) ஆகியோர் வசம் மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி, பங்களா புதூர் வனச்சரகங்களில் இருந்து எடுக்கப்பட்டதா? என போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: