×

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கூவம் ஆற்றில் வெளியேற்றிய 9 டேங்கர் லாரிகளின் பதிவு சான்றிதழ் ரத்து: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

சென்னை: சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கூவம் ஆற்றில் வெளியேற்றிய 9 டேங்கர் லாரிகளின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கூவம் ஆறு சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில்,  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின்  கிளையாறாக உருவாகி, நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை சாக்கடையாக்கிய மோசமான பெருமை, நமக்கு உண்டு. கூவம் என்றதும் மூக்கை  பிடிக்கும் அளவிற்கு வீசும் துர்நாற்றம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால்,  படகுப் போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணுவதோடு சுற்றுலா  தலமாகவும் கூவம் இருந்தது என்பது வரலாறு.

கடந்த 65  ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், கேசவரம்  பகுதியில், 437 மீ., நீளத்தில், 16 ஷட்டர்களுடன், கேசவரம் அணை  கட்டப்பட்டது. பாலாற்றில் இருந்து கல்லாற்றுக்கு வரும் தண்ணீர்,  கல்லாற்றில் இருந்து கேசவரம் அணையை வந்தடைகிறது. அவ்வாறு வந்தடையும் நீர்,  கேசவரம் அணையில் இருந்து, ஒருபக்கம் கொற்றலை ஆறாகவும், மறு பக்கம் கூவம்  ஆறாகவும், பிரிந்து ஓடுகிறது. ஆவடி பருத்திபட்டு வரை, கழிவுநீர் கலப்பு இல்லாமல் வரும்  கூவம் ஆறு, ஆவடி  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள  வீரராகவபுரத்தில், ஆவடி மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வசிக்கும்  மக்களால் உபயோகப்படுத்தப்படும் மொத்த கழிவுநீரும் கலக்கிறது. சென்னீர்குப்பம்  பகுதியில், சாயப்பட்டறையின் கழிவுநீர் மொத்தமும் கூவம் ஆற்றில் கலக்கிறது.  இதுபோல், சென்னையில், கூவம் செல்லும் வழித்தடத்தில், 40க்கும்  மேற்பட்டஇடங்களில் கழிவுநீர் கலப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சிலர் டேங்கர் லாரியில் ெகாண்டு வந்து கூவம் ஆற்றில் விடுகிறது. இதுபோல், விதிமீறி கழிவுநீரை கூவத்தில் விடப்படுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கூவம்  ஆற்றில் வெளியேற்றிய 9 டேங்கர் லாரிகளின் பதிவுச் சான்றிதழை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்போது ரத்து செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை, வானகரம், ராஜாங்குப்பம் பகுதியிலுள்ள அவந்திகா மருந்தகத்தை ஒட்டியுள்ள வளாகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கூவம் ஆற்றில் வெளியேற்றுவது குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் மேற்படி இடத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கடந்த மாதம் 4ம் தேதி ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கூவம் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு அந்த இடம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. மேலும் வடக்கு பக்க சுற்றுச்சுவரில் கூவம் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்ற படிக்கட்டுகளுடன் கூடிய திறப்பு இருப்பதும்,  டேங்கர் லாரியில் இருந்து கழிவுநீரை கூவம் ஆற்றில் விடுவதற்காக குழாய்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் படி, 9 டேங்கர் லாரிகளின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்யுமாறு 9.9.2022 அன்று கூடுதல் தலைமை செயலாளர், உள்துறைக்கு (போக்குவரத்துத் துறை)  வாரியம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974ன் பிரிவு 33கி இன் கீழ் எண்.1/34 கண்ணபிரான் தெரு, நூம்பல், சென்னை என்ற விலாசத்தில் இயங்கி வரும் நடேசன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை மூடுவதற்கும், மின் இணைப்பைத் துண்டிப்பதற்கும் வாரியம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவ்வளாகத்தை சீல் வைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 5.9.2022 அன்று இவ்வளாகத்தின் மின் இணைப்பு மின்வாரியத்தால் துண்டிக்கப்பட்டது. மேலும் 13.9.2022 அன்று மேற்கூறிய வளாகம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. எனவே கழிவுநீர் டேங்கர் லாரிகளை கையாளுபவர்கள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து சேகரிக்கும் கழிவுநீரை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்ற வேண்டும். சட்ட விரோதமாக நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும். பொது மக்கள் சட்ட விரோதமாக செயல்படும் கழிவுநீர் டேங்கர் லாரிகளைக் கண்டறிந்தால் அத்தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

*சிறந்த வடிகால்
கடந்த  2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமியின் போது இந்த கூவம் ஆறு ஒரு  வடிகாலாகச் செயல்பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல்  தப்பித்தது. சுனாமியின் போது ஆற்றின் கழிமுகப்பகுதியின் அசுத்தம்  நீங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எப்போதும் கறுப்பாக தெரியும்  தண்ணீர் கண்ணாடி போல் மின்னியது. ஆனால் சுனாமி முடிந்த சில வாரங்களுக்குள்  பழைய நிலைக்குத் திரும்பியது.

*நகருக்குள் 18 கி.மீ.,
கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல்  பெற்ற சைவ தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுர கிலோ மீட்டர். ஆற்று படுக்கையின் அகலம் 40 முதல் 120 மீட்டர். புறநகரில் 40 கிலோ மீட்டரும், நகருக்குள் 18 கிலோ மீட்டரும் ஓடுகிறது.

*கூவம் என்னும் கிராமத்தில் உள்ள கூவம் ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், நரசிங்கபுரம், இருளஞ்சேரி,  சத்திரை வழியாகவும், பன்னூர், கீழச்சேரி வழியாக சென்று, மப்பேடு அருகில்  கூவம் ஆற்றில் கலக்கிறது. இதையடுத்து அதிகத்தூர், மணவாளநகர்,  அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல்,  கோயம்பேடு வழியாக பயணித்து, சென்னை நேப்பியர் பாலம்  அருகே கடலில் கலக்கிறது.

Tags : Kouva ,Emulsion Control Board , Cancellation of registration certificate of 9 tanker trucks that discharged untreated sewage into Coovam River: Pollution Control Board action
× RELATED விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில்...